கோவை

தி.மு.க.விலிருந்து தொண்டர்கள் வெளியேறி கழகத்தில் இணைவார்கள் – பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேட்டி

கோவை

பிரசாந்த் கிஷோர் இயக்கும் பொம்மையாக ஸ்டாலின் இருப்பதால் திமுகவிலிருந்து தொண்டர்கள் வெளியேறி விரைவில் கழகத்தில் இணைவார்கள் என்று சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்திற்கான கட்டுமானப்பணிகளை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குள்ளக்காபாளையம், வரதனூர் உள்பட 3 கிராமத்தில் 21 லட்சம் ரூபாய் செலவில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சென்ற ஆண்டு 19 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் இந்த பகுதியில் நடைபெற்றது.மேலும் பொள்ளாச்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை பொறுத்தவரை சட்டமன்றத்தில் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய கல்லூரி கட்டிடம் அமைய தமிழக முதல்வர் 7.5 கோடி ரூபாய் ஒதுக்கினார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது பணிகள் வேகமாக நடைபெறுகிறது. இக்கல்லூரி சிறந்த கல்லூரியாக அமையும். இங்கு அனைத்து பாடப்பிரிவுகளும் இந்த ஆண்டு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கழகம் என்றால் கொள்கை, குறிக்கோளோடு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா காட்டிய பாதையில் செயல்படுகிறது. தொண்டர்களையும், கட்சி கொள்கையையும் நம்பி எங்களது இயக்கம் செயல்படுகிறது. எந்த மாற்று சக்தியையும் நம்பி நாங்கள் இல்லை. இதுவே எங்களது நிலைப்பாடு. ஆனால் திமுக.வை பொறுத்தவரை பிரசாந்த் கிஷோர், ஸ்டாலின் என இரட்டை தலைமையோடு செயல்படுகிறது. திரைமறைவு தலைவராக பிரசாந்த் கிஷோர் வலம் வருகிறார். ஸ்டாலினோ பிரசாந்த் கிஷோர் இயக்கும் பொம்மையாக செயல்படுகிறார்.

அண்ணா வழி, பெரியார் வழி என்று சொல்லிக்கொண்டு இருந்த திமுகவின் நிலை மாறி இன்று பிரசாந்த் கிஷோர் வழி என்ற வழியில் செயல்படுகிறது. இதனை திமுகவில் உள்ள தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மை தலைவர் யாரென்று தெரியாமல் திமுக தொண்டர்கள் கொதித்து போயுள்ளார்கள். இதனால் திமுக தொண்டர்கள் திமுகவிலிருந்து வெளியேறி விரைவில் அதிமுகவில் இணைவார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலின் கணக்கு மேதையாக மாறி கொரோனோ பரிசோதனைக்காக இதுவரை இவ்வளவு ராபிட் கருவிகள் வாங்கப்பட்டது. இவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டது. மீதமுள்ள ராபிட் கிட் கருவிகள் காணாமல் போய்விட்டது என்று முதிர்ச்சி இல்லாமல் பேசி வருகிறார். அவசர குடுக்கையாக செயல்படும் ஸ்டாலின் இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும். இதற்கு தமிழக முதல்வர் தகுந்த பதில் அளித்துள்ளார். 43 பரிசோதனை நிலையங்களில் மீதமுள்ள பரிசோதனை கிட்கள் வைக்கப்பட்டுள்ளது என்றும் பதிலளித்து விட்டார்.

இவ்வாறு பொள்ளாச்சி வ.ஜெயராமன் கூறினார்.

இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், பொள்ளாச்சி நகரக் கழக செயலாளருமான வி.கிருஷ்ணகுமார், வட்டாட்சியர் தணிகைவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராதாமணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜேம்ஸ்ராஜா, நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம், எஸ்.பி.வசந்த் ஆகியோர் உடனிருந்தனர்.