தற்போதைய செய்திகள்

பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 2400 பேர் கழகத்தில் ஐக்கியம் – கலசப்பாக்கம் பகுதியில் எம்.எல்.ஏ முன்னிலையில் இணைப்பு விழா

திருவண்ணாமலை

கலசப்பாக்கம் பகுதியில் திமுக, அமமுக நாம் தமிழர் உள்ளிட்ட மாற்று கட்சியினர் மற்றும் இளைஞர்கள் உட்பட 2400 பேர் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

முதலமைச்சரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி கலசப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட கேட்டவரம்பாளையம், காந்த பாளையம், ஆதமங்கலம் புதூர், வீரளூர் கெங்கவரம் கலசப்பாக்கம் ஒன்றிய பகுதிகளில் இருந்து தி.மு.க, அ.ம.மு.க நாம்தமிழர் உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியினர் மற்றும் இளைஞர்கள் என 2400பேர் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி தங்களை கழகத்தில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி கேட்டவரம் பாளையத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை தெற்கு எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட கழக செயலாளரும், கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாற்று கட்சியில் இருந்து கழகத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் வேட்டி, துண்டு மற்றும் நினைவு பரிசு வழங்கி அனைவரையும் வரவேற்றார்.

அதனைத்தொடர்ந்து கழகத்தில் இணைந்தவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றிய திமுகவினரை இனிமேலும் மக்கள் நம்ப மாட்டோம். தமிழக மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருவது அம்மாவின் அரசு.

எனவே தான் நாங்கள் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டோம். தாயுள்ளத்தோடு எங்களை கழகத்தில் இணைத்துக் கொண்ட முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இனி எப்பொழுதும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி அமைய பாடுபடுவோம் என உறுதி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் முகக் கவசங்கள் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், கிருமிநாசினிகள் பயன்படுத்தியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, ஒன்றிய குழு உறுப்பினர் மாதுரி இளங்கோ, மாவட்ட மாணவரணி துணைதலைவர் கேட்டவரம்பாளையம் ரமேஷ், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சீனிவாசன், ஆதமங்கலம் கார்த்திக் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள்,கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.