தற்போதைய செய்திகள்

480 பேருக்கு ரூ.1.98 கோடியில் நலத்திட்ட உதவி – அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினார்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் 480 பயனாளிகளுக்கு ரூ. 1.98 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலத்துறை சார்பில் 480 பயனாளிகளுக்கு ரூ.1.98 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை, நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெ.நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி கலந்து கொண்டு கூட்டுறவுத்துறை மூலம் 144 பயனாளிகளுக்கு ரூ.1.45 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் உதவிகளையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 90 பயனாளிகளுக்கு ரூ.50.76 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், சமூகநலத்துறை மூலம் அரசு சேவை இல்ல மாணவிகள் மற்றும் அரசு பணியில் பணிபுரியும் மகளிர்களுக்கென 105 நபர்களுக்கு கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் என 480 பயனாளிகளுக்கு ரூ.1.98 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான பல்வேறு கடனுதவிகளை வழங்கஆணையிட்டுள்ளார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் பொதுமக்களுக்கு உடனடி கடன் உதவிகளை வழங்கி வருகின்றன. தற்போது கொரோனா வைரசால் பல்வேறு தரப்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுக்களின் அவசர தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு கோவிட்-19 சிறப்பு கடனுதவி திட்டம் என்று புதிய கடன் பொருள் (new loan product) அறிமுகப்படுத்தப்படுகிறது.

இக்கடன் மத்திக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் குழுக்களுக்கு வழங்கப்படுகிறது. இன்று சுய உதவிக்குழுக்கடன், சிறுவணிகக்கடன், வீட்டு அடமான கடன், சாலையோர வியாபாரிகளுக்கு தொழிற்கடன் என 379 நபர்களுக்கு ரூ.1.44 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டது.

சமூகநலத்துறை மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தொடர்ந்து சமூகநலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு சேவை இல்லத்தில் தங்கி பயனடைந்து வரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 69 மாணவிகளுக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்களும், மகளிர் விடுதிகளில் தங்கி பயனடைந்து வரும் அரசு வேலைகளில் பணிபுரியும் 36 மகளிருக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பில் முக கவசம், கையுறை, சானிடைசர், சோப் போன்ற கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு சாதனங்கள், கிருமி நாசினி, நோய் எதிர்பாற்றல் அதிகரிப்பதற்கான மூலிகைகள், வைட்டமின் மாத்திரைகள் ஆகியவை வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2019-2020ம் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 90 நபர்களுக்கு ரூ.50.76 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், காது கேளாத, வாய் பேசாத நபர்களுக்கு பிரத்யேக 1500 முக கவசங்களும், 6 நபர்களுக்கு ஆவின் பால்பொருட்கள் கொள்முதல் செய்து விற்பனை செய்திட முழு மானியமும், ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சம் (இந்திய அரசு) எ.டி.ஐ.பி திட்டத்தின் கீழ் தொடுதிரை கைபேசி, மனவளர்ச்சி குன்றியோருக்கு சிறப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மேலும் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். வெளியில் சென்று வீடு திரும்பும்போது கட்டாயம் கை, கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும். வீடுகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சுகாதாரம் பேணி காத்தல் மூலம் பல்வேறு நோய் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.

இவ்வாறு அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை கணேசராஜா, ஆவின் தலைவர் சுதா பரமசிவன், அச்சக சங்க தலைவர் கண்ணன் (எ) ராஜீ, நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சண்முகசுந்தரம், கூட்டுறவு இணைபதிவாளர் குருமூர்த்தி, மண்டல இணைபதிவாளர் பிரியதர்ஷினி சமூகநலத்துறை அலுவலர் சரஸ்வதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிரபாகரன் உட்பட அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.