தற்போதைய செய்திகள்

திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மக்களுக்கும் தாயுள்ளத்தோடு நிவாரணம் வழங்கியவர் முதலமைச்சர் – ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி

மதுரை

திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி உள்பட 234 தொகுதிகளுக்கும் தாயுள்ளத்தோடு நிவாரண உதவிகளை வழங்கியவர் முதலமைச்சர் என்று ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

கழக அம்மா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பிலும் கபசுர குடிநீர் மட்டும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை செக்காணூரணியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;-

இந்த தொற்று நோயிலிருந்து மக்களைக் காக்க போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார். மக்களை காப்பதில் இந்தியாவிற்கு வழிகாட்டியாக முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார். தற்போது 5 கட்ட ஊரடங்கு அமலில் உள்ள வேளையில், முதல்கட்ட ஊரடங்கு தொடங்கும் முன்பு ரூ.3,280 கோடியில் பல்வேறு நிவாரண தொகுப்புகளை வழங்கினார். 1000 ரூபாய் நிவாரண தொகை வழங்கி தொடர்ந்து மூன்று மாதங்களாக அரிசி, பருப்பு ,எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை முதலமைச்சர் வழங்கி வருகிறார். தற்போது கூட ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால் கூட அவர்களுக்கு 50 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாது 35 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை மற்றும் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வண்ணம் விலையில்லா உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தினந்தோறும் 7 லட்சம் மக்கள் பயன் பெற்று வருகின்றனர். அதேபோல் சமுதாய கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு தினந்தோறும் இரண்டு லட்சம் ஆதரவற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது

இப்படி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள 2 கோடியே ஒரு லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் தொடர்ந்து நிவாரண தொகுப்புகளை வழங்கி வருகிறார். இதில் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி உள்பட திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் உள்ளிட்ட அனைத்து தொகுதியிலும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரண தொகுப்புகளை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் முதலமைச்சரை பாராட்டி வருகின்றனர். இப்படியே சென்றால் வரும் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து விடும் என்ற பயத்தால் ஸ்டாலின் தற்போது தொடர்ந்து விஷம பிரச்சாரங்கள் செய்து வருகிறார். யாரோ எழுதிக் கொடுத்ததை கண்மூடி வாசித்திருக்கிறார் ஸ்டாலின். முதலில் உங்கள் தொகுதி மக்களை கேட்டுப்பாருங்கள். அவர்கள் இந்த அரசுக்கு நற்சான்று அளிப்பார்கள். ஆகவே இன்று இந்தியாவே பாராட்டும் வகையில் முதலமைச்சர் சிறப்பான முறையில் நிவாரணம் வழங்கி வருகிறார். ஸ்டாலின் எத்தனை முறை கோயபல்ஸ் பொய் பிரச்சாரம் செய்தாலும் அது ஒருபோதும் பொதுமக்களிடம் எடுபடாது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய், மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன், முன்னாள் சேர்மன் தமிழழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்