தற்போதைய செய்திகள்

நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.2,564 கோடி பயிர்கடன் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

திருச்சி

நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் ரூ.2,564 கோடி அளவிற்கு பயிர்கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க, காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக வருகின்ற 12.06.2020 முதல் நீர் திறப்பதையொட்டி, குறுவை சாகுபடிக்குத் தேவையான பயிர்க்கடன் வழங்குதல், வேளாண் இடுபொருட்கள் மற்றும் உர விநியோகம் தொடர்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் திருச்சி ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டுறவுத்துறையின் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுடனான ஆய்வுக்கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்ததாவது:-

டெல்டா மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடப்பாண்டில் ரூ.2,564 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்படவுள்ளது. இதில் 22.05.2020 வரை ரூ.43.88 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு குறுவை சாகுபடிக்கு தேவையான, 29,889 மெட்ரிக் டன் யூரியா, டி.ஏ.பி, எம்.ஓ.பி, காம்ளக்ஸ் போன்ற உரங்கள் இருப்பில் உள்ளன. திருச்சி மாவட்டத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, கொரோனா சிறப்பு நிதியுதவி திட்டத்தின் மூலம், 5 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த, 64 நபர்களுக்கு ரூ.3,20,000 அளவிற்கு கடன் வழங்கப்பட்டது.

மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலன் மற்றும் அவர்களின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டும், இருமடங்கு உற்பத்தி, மும்மடங்கு வருவாய் என, விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்குடனும், புரட்சித்தலைவி அம்மா அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2011ம் ஆண்டு முதல், 22.05.2020 வரை, 94,83,206 விவசாயிகளுக்கு, ரூ.51,306.07 கோடி வட்டியில்லாப் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்ற நாளான 16.02.2017 முதல் 22.05.2020 வரை 37,57,433 விவசாயிகளுக்கு, ரூ.24,592.34 கோடி அளவிற்கு வட்டியில்லாப் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது, 2020-21 ஆண்டிற்கு ரூ.11,000 கோடி பயிர்க்கடன் குறியீடு நிர்ணயிக்கப்பட்டு, 22.05.2020 வரை ரூ. 22,172 விவசாயிகளுக்கு ரூ.173.77 கோடி வட்டியில்லாப் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

குறுவை சாகுபடி பணியை மேற்கொள்ள, டெல்டா மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்ற முதலமைச்சரின் ஆணைக்கேற்ப, நடப்பு 2020-2021-ம் ஆண்டில் ரூ.2,564 கோடி அளவிற்கு டெல்டா மாவட்டங்களில் பயிர்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த 22.05.2020 வரை, ரூ.43.88 கோடி அளவிற்கு, பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை, குறுவை சாகுபடியை முன்னிட்டு, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தாமதமின்றி உரிய காலத்தில் வட்டியில்லாப் பயிர்க்கடன் வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

குறுவை நெல் சாகுபடிக்குத் தேவையான இரசாயன உரங்களை போதுமான அளவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பில் வைக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் ஆணைக்கேற்ப, 01.06.2020 அன்று, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள தேவைப்படும், 11,240 மெ.டன் யூரியா, 7,587 மெ.டன் டி.ஏ.பி, 4,157 மெ.டன் எம்.ஓ.பி மற்றும் 6,905 மெ.டன் காம்ப்ளக்ஸ் என மொத்தம் 29,889 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பில் உள்ளது.

கூடுதலாக தேவைப்படும் உரங்கள், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் கொள்முதல் செய்து, டெல்டா மாவட்டங்களில் உள்ள, 697 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு, உடனுக்குடன் அனுப்பப்பட்டு, போதிய அளவு உரங்களை இருப்பு வைக்க வேண்டும். மேலும், குறுவை சாகுபடிக்கு ஏற்ற குறுகிய கால நெல் ரக விதைகளை, தேவைப்படும் நேர்வுகளில் தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் கொள்முதல் செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

டெல்டா மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல்படும் 85 வேளாண் சேவை மையங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு தேவைப்படும் நடவு இயந்திரங்கள், டிராக்டர்கள், சுழற்கலப்பைகள், உழுவு இயந்திரங்கள் வேளாண்கருவிகள் போன்றவற்றை குறைந்த வாடகைக்கு வழங்கவும் தக்க அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசால், கடந்த 9 ஆண்டுகளில், அதாவது 29.02.2020 வரை 2,01,805 நபர்களுக்கு ரூ.2,585.45 கோடி அளவில் தானிய ஈட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 4,449 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் 120 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் உள்ள 5,10,600 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகளுடன் ஏற்கனவே, உள்ள கிடங்குகளையும் விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடந்த 9 ஆண்டுகளில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில், கூட்டுறவு வங்கிகள், விற்பனைச் சங்கங்கள், பண்டகசாலைகள் உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு அமைப்புகளிலும் உட்கட்டமைப்பு, நவீனமயம், கணினிமயம், வைப்பீடு என அனைத்து வகைகளிலும் பிரமிக்கத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளன.

பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் அறிந்து கூட்டுறவுச் சங்கங்கள் சிறப்பாக சேவையாற்றி சங்கப் பணியாளர்கள் தங்களது சங்கங்களையும், கூட்டுறவுத்துறையையும், முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும். தற்போது, நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விவசாய பெருமக்களும், வேளாண் தொழிலாளர்களும் முககவசம் அணிந்து, பரிந்துரைக்கப்பட்ட சமூக இடைவெளியை கடைபிடித்து சாகுபடி பணிகளை பாதுகாப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் பதிவாளர் எம்.அந்தோணிசாமி ஜான் பீட்டர், தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர்.ஜி.சக்திசரவணன், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.முருகன், கூடுதல் பதிவாளர் கு.ரவிக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.என்.டி.நடேசன் மற்றும் டெல்டா மாவட்ட மண்டல இணைப்பதிவாளர்கள், மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, திருச்சி பொன்மலைப்பட்டியில் மத்திய கூட்டுறவு வங்கியின் 74-வது வங்கிக் கிளையை புதிதாக தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சுப்ரமணியபுரத்தில் உள்ள நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஆய்வு செய்தார்.