தற்போதைய செய்திகள்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் முதல்வருக்கு வெற்றி — வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ பேச்சு

மதுரை

அரசுக்கு எதிரான தி.மு.க.வின் முயற்சிகள் அனைத்தும் தோற்கிறது. கொரோனா வைரசை கட்டப்படுத்தும் முயற்சியில் முதல்வர் வெற்றி கண்டிருக்கிறார் என்று வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ கூறி உள்ளார்.

மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட புதூரில் 1000 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு ,காய்கறி உள்ளிட்ட நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாமன்ற உறுப்பினர் புதூர் அபுதாகீர் தலைமை தாங்கினார். மச்சக்காளை முன்னிலை வகித்தார். நிவாரண தொகுப்புகளை மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பகுதி கழக கழக செயலாளர் ஜெயவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ பேசியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் ஏறக்குறைய 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அளவில் நிவாரண பொருட்களை முதலமைச்சர் வழங்கி வருகிறார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் களத்தில் தமிழக முதல்வர் இறங்கி நல்ல சூழலை உருவாக்கி இருக்கிறார். திமுக மாயையை ஏற்படுத்தி வருகிறது. கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிணைவோம் வா என்று பேசி மக்களுக்கு உதவுவது போல் நாடகமாடி வருகிறார்கள். அம்மா அரசு மக்களுக்கு போதுமான அளவிற்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது.

திமுகவின் நடைமுறையும், கொள்கையும் முரண்பாடாக இருக்கிறது. தமிழக முதல்வர் விழித்திரு, தனித்திரு, வீட்டில் இரு என்று சொல்லி இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார். ஆனால் அம்மாவின் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒன்றிணைவோம் வா என்று முரணான செயலில் தி.மு.க. ஈடுபட்டு வருகிறது. இந்தியா மட்டுமல்ல உலகமே தனித்திரு என்று கூறி வருகிறது. ஆனால் திமுகவினர் ஒன்றிணைவோம் வா என முற்றிலும் முரண்பாடான கொள்கைகளை சொல்லி கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு எதிராக திமுக எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் தோற்றுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்.