தற்போதைய செய்திகள்

அம்மா மினி கிளினிக்குகள் பிற்காலத்தில் தரம் உயர்வு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்

தூத்துக்குடி

அம்மா மினி கிளினிக்குகள் பிற்காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம் தருவைகுளம் மற்றும் கே.கைலாசபுரம் கிராம பகுதியில் அம்மா மினி கிளினிக்; துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, அம்மா மினி கிளினிக்கினை துவக்கி வைத்தார். மேலும், 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திக்குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஏழை, எளிய மக்கள் மருத்துவ வசதி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து கிராம பகுதிகளிலும் அம்மா மருத்துவ முகாம்களை நடத்தினார். சென்னையில் முந்தைய ஆட்சியாளர்களால் தேவையின்றி கட்டப்பட்ட தலைமை செயலக கட்டிடத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல்நோக்கு மருத்துவமனையாக உருவாக்கினார். மக்களுக்கான திட்டங்களை உருவாக்கிய ஒப்பில்லா முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். தமிழகம் முழுவதும் அனைத்து கிராமப்பகுதிகளிலும் மருத்துவ முகாம்களை நடத்தினார். தமிழகத்தில் சிறந்த மருத்துவ கட்டமைப்பினை உருவாக்கினார்.

அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் அவர்களும் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை புதிதாக துவக்கினார்கள். இதன் மூலம் மருத்துவ வசதிகள் அதிகரித்துள்ளது. அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்வியில் இடம் பெற வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்ததன் பயனாக ஏழை மாணவ, மாணவிகளும் மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் அரசு பள்ளி மாணவர்கள் 4 நபர்களுக்கு மட்டுமே மருத்துவராகும் வாய்ப்பு இருந்தது. இந்த ஆண்டு இட ஒதுக்கீடு செய்ததன் மூலம் 434 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

முதலமைச்சர் தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகளை துவக்க உத்தரவிட்டு முதற்கட்டமாக 630 மினி கிளினிக்குகள் துவக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 18 கிளினிக்குகள் ஒதுக்கப்பட்டு துவக்கப்பட்டு வருகிறது. தருவைகுளம் மற்றும் கே.கைலாசபுரம் மக்களின் நீண்ட நாள் மருத்துவ வசதி கோரிக்கையான அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அருகிலேயே சிகிச்சை பெறலாம். இப்பகுதி பொதுமக்களுக்கு சிறு சிறு நோய்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும். அம்மா மினி கிளினிக்கில் ஒரு மருத்துவ அலுவலர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ உதவியாளர் என 3 நபர்கள் பணியில் இருப்பார்கள். தினசரி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் இங்கு மருத்துவ சேவை வழங்கப்படும்.

இதன் மூலம் கிராம மக்கள் தொலைதூரம் சென்று சிகிச்சை பெறுவது தவிர்க்கப்பட்டு உள்@ரிலேயே சிகிச்சை பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. அம்மா மினி கிளினிக்குகள் பிற்காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்படும். மேலும் இப்பகுதி மக்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பல்வேறு நிதியின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் அனிதா, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் முத்து, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் செல்வக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோபி (எ) அழகிரி, ஆலோசனைமரியான், முக்கிய பிரமுகர்கள் டேக்ராஜா, எடிசன், முருகேசன், போடுசாமி, தருவைகுளம் ஊராட்சி தலைவர் காடோடி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.