தற்போதைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் 2 மாதத்திற்குள் முடிவடையும் – அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தகவல்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெறும் அனைத்து பணிகளும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடிவடையும் என்று அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி சத்திரம், புதுக்குளத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு தாமிரபரணி கோட்டத்தின் மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் மறுகால் கால்வாய் தூர்வாரும் பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி கலந்து கொண்டு சத்திரம், புதுக்குளத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மறுகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2020-ம் ஆண்டுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் 46 பணிகள் மேற்கொள்ள ரூ.16.76 கோடியை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் 33 பணிகள் தாமிரபரணி வடிநில கோட்டத்திலும், 12 பணிகள் சிற்றாறு வடிநில கோட்டத்திலும், ஒரு பணி கோதையாறு வடிநில கோட்டத்திலும் என பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் 23120.96 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் பயன்பெறுவார்கள். ஒவ்வொரு பணிகளும் அந்தந்த பகுதியில் உள்ள விவசாய சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேறும் பகுதிகளை முதலில் சரி செய்துவிட்டு பணிகளை தொடங்க வேண்டும். விவசாயிகள் பணிகளை மேற்கொள்ளும்போது கட்டாயம் முக கவசங்களை அணிந்தும் சமூக விலகலை கடைபிடித்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கடந்த ஆண்டு மேற்கொண்ட குடிமராமத்து பணிகள் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் நிரம்பி பாசனம் செய்து சாகுபடி செழிப்பாகி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெறும் அனைத்து பணிகளும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடிவடையும்.

இவ்வாறு அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை கணேசராஜா, ஆவின் தலைவர் சுதாபரமசிவன், அச்சக சங்க தலைவர் கண்ணன் (எ) ராஜீ, நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர் பரணி சங்கரலிங்கம், பொதுப்பணித்துறை தாமிரபரணி கோட்டம் செயற்பொறியாளர் அண்ணாத்துரை, உதவி செயற்பொறியாளர் தங்கராஜன், உதவி பொறியாளர் ரமேஷ்குமார், திருநெல்வேலி வட்டாட்சியர் பகவதி பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி நடராஜன், சத்திரம் புதுக்குளம் குடிமராமத்து விவசாயிகள் சங்க தலைவர் பேச்சிகுட்டி, துணைத்தலைவர் தங்கராஜ், செயலாளர் முருகன் உட்பட விவசாயிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.