தேனி

நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் – தேனி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

தேனி

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென பொதுமக்களை தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் சென்னை சென்று தேனி மாவட்டம் திரும்பியுள்ள சிலமலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், குச்சனூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது. தொற்று கண்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்ட பகுதிகளில் நெருங்கிய தொடர்பிலிருந்த நபர்களிடமிருந்து மாதிரிகள் சேகரித்து ஆய்வக பரிசோதனைகள் மேற்கொள்ள தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் சோதனைச்சாவடிகளில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்த 145 நபர்கள்.
அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 172 நபர்கள் என மொத்தம் 317 நபர்களுக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 119 நபர்களில் 99 நபர்கள் பூரண குணமடைந்துள்ளனர். இரண்டு நபர்கள் இறந்துள்ளனர். 15 நபர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவர் கம்பம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 நபர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொது ஊரடங்கு நடைமுறையில் வணிகம், பொது போக்குவரத்து மற்றும் சிறு குறு தொழில் மேற்கொள்ளுதல் போன்ற ஒருசில தளர்வுகள் தமிழக அரசினால் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகள் முன்னிட்டு அன்றாட பணிகளை மேற்கொள்ளும் போது தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தும் வகையில் அடிக்கடி கை மற்றும் முகம் கழுவுதல், கிருமி நாசினி பயன்பாடு, முகக்கவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கேட்டுக்கொண்டுள்ளார்.