தற்போதைய செய்திகள்

வேலூர் கிழக்கு-மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனை கூட்டம்

வேலூர்

வேலூர் மாநகரத்தில் வேலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற வேலூர் கிழக்கு, மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல், மண்டல செயலாளர் கோவை சத்யன் ஆகியோர் பங்கேற்றனர்.

வேலூர் கிழக்கு மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலூர் மாநகரில் வேலூர் மேற்கு பகுதி எஸ்.வி.கே.மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார் தலைமையேற்று அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி, வேலூர் மேற்கு மாவட்ட கழக துணைச்செயலாளரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான டாக்டர் நிலோபர்கபீல், வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ, வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவை சத்யன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவை சத்யன் ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

நவீன காலத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு அனைத்து துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உத்தரவின்படி, வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஊரடங்கை கருத்தில் கொண்டு அனைத்து கழக நிர்வாகிகளும் அந்தந்த பகுதிகளில் ஏழை எளியவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வாரி வழங்கியுள்ளனர்.

ஆனால் நாம் சுய விளம்பரங்களை தேடிக் கொள்ளவில்லை. விளம்பரம் படுத்தாமல் அமைதியாக ஒவ்வொரு கழக நிர்வாகிகளும் ஆயிரம் நபர்களுக்கு மேல் அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறி தொகுப்புகளை வழங்கியுள்ளனர். ஆனால் நாம் அந்த செய்திகளை வாட்ஸ்அப் ,டிவி,செய்தித்தாள், முகநூல், டுவிட்டர் மூலம் விளம்பரப்படுத்தவில்லை. ஆனால் திமுகவினர் 10 மூட்டை அரிசியை கொடுத்துவிட்டு ஆயிரம் மூட்டை அரிசி வழங்கியதாக அவர்களுடைய டிவி, செய்தித்தாள், முகநூல் வாட்ஸ் ஆப், டுவிட்டர் மூலம் பொய் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். ஆகவே திமுகவின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்க நாம் வருங்காலங்களில் தகவல் தொழில்நுட்ப பிரிவை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் எவ்வளவு நல்லது செய்தாலும் அந்த தகவல்கள் மக்களுக்கு சென்று சேருவதில்லை. இதற்கு காரணம் தகவல் தொழில் நுட்பத்தை சரியாக நாம் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. இதில் நமக்கு தெரியாத பல விஷயங்களை இன்றைய தலைமுறையினர் தெரிந்து வைத்துள்ளனர். எனவே வரும் தேர்தலில் நாம் அமோகமாக வெற்றி பெற வேண்டுமெனில் தகவல் தொழில்நுட்பத்தை நன்றாக பயன்படுத்த வேண்டும்.

பூத் வாரியாக 18 முதல் 20 வயதுள்ள இளைஞர்கள் 10 முதல் 15 பேரை தகவல் தொழில்நுட்பப் பிரிவில் நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும். அவர்கள் மூலம் நமது செயல் திட்டங்கள் உடனுக்குடன் மக்களுக்கு சென்றடைய செய்ய வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெறும். ஸ்டாலினின் பொய் பிரசாரம் எடுபடாது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவினரை வீட்டிற்கு அனுப்ப பொதுமக்கள் தயாராகி விட்டனர்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவை சத்யன் பேசியதாவது:- 

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தகவல் தொழில் நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும். தகவல் தொழில்நுட்பம் மூலம் 3% லிருந்து 5% வரை வாக்குகள் மாற்றக் கூடிய வல்லமை படைத்தது. இன்றைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பங்கள் இன்றியமையாதது என்பதை அனைவரும் உணர்ந்து உள்ளோம். இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் இந்த பிரிவை 2013-ம் ஆண்டு ஏற்படுத்தினார். இப்போது தகவல் தொழில்நுட்பம் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது.

காற்றுப்புகாத இடத்தில் கூட டேட்டா புகுந்து விடுகிறது. ஒரு தலைவரை ஆட்சியில் அமர்த்தவும் , கவிழ்க்கவும் சோசியல் மீடியாவில் முடியும். இதை நன்கு உணர்ந்த கட்சித் தலைமை தகவல் தொழில்நுட்ப பிரிவை நான்கு மண்டலங்களாக பிரித்து பொறுப்பாளர்களை நியமித்து உள்ளது‌. மேலும் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து அவை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமை எங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளை சரியாக நிவர்த்தி செய்து விட்டால் வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் கழகம் அமோகமாக வெற்றி பெறுவது உறுதி. எனவே தகவல் தொழில்நுட்பத்தை திறமையுடன் செயல்படுத்த இளைஞர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். மேலும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து தர கட்சிப் பொறுப்பாளர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். நமது எதிரியிடம் 43 சேனல்களுக்கு மேல் உள்ளது. ஆகவே திமுகவினரின் பொய் பிரச்சாரங்களை, திறமையாக முறியடிக்கும் வகையில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும். ராமருக்கு, அணில் போல் நாங்கள் கழகம் என்ற பேரியக்கத்திற்கு உதவியாக இருப்போம்.

இவ்வாறு வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவை சத்யன் பேசினார்.