தற்போதைய செய்திகள்

கொரோனா நோயாளிகளின் மருத்துவக்கழிவுகள் 11 பொது சுத்திகரிப்பு நிறுவனங்களின் மூலம் அகற்றம் – அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்

ஈரோடு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நோயாளிகளின் மருத்துவக்கழிவுகள் 11 பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிறுவனங்களின் மூலம் அகற்றப்படுகிறது என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஈரோடு மாவட்டம், பவானி தொகுதிக்குட்பட்ட சலங்கபாளையம் பேரூராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் வாய்க்கால் ஏரி, கோபி சாலை பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் தலைமையில், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆணைக்கிணங்க, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் ஜூன் 5 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சலங்கபாளையம் பேரூராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்றினை நட்டு வைத்து, இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக காற்றில் உள்ள நுண் துகள்கள், கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன்ஆக்ஸைடு மற்றும் இதர நச்சு வாயுக்களின் அளவு குறைந்து, காற்றின் தரம் நல்ல நிலையில் உள்ளது. அதேபோன்று நீர்நிலைகளின் தரம் மேம்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் போது வெளியேற்றப்படும் மருத்துவக்கழிவுகள் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி மக்களுக்கு மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தாத வண்ணம் சேகரிக்கப்பட்டு 11 பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிறுவனங்களின் மூலம் அகற்றப்படுகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இதில் முக்கியமாக நீர் வளங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் நிலத்தடி நீர் பயன்பாட்டினை குறைக்கும் பொருட்டு தொழிற்சாலைகளில் சாயமிடும் தொழிற்சாலைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகளில் பூஜ்ஜிய கழிவுநீர் வெளியேற்றம் நிலையம் அமைத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் பசுமை வளையம் அமைத்தல் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கப்பட வேண்டுமானால் அனைவரது பங்களிப்பும் மிகவும் அவசியம் ஆகின்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வில் சிறந்த பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்பு நலச்சங்கங்களுக்கு பசுமை விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் ஏரிகள் மற்றும் குளங்களை சீரமைக்கும் பணி ரூ.95 கோடி மதிப்பீட்டில் வாரிய நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாபெரும் பசுமைப் போர்வை திட்டம் செயல்படுத்துவதற்காக ரூ.83.66 கோடி வாரிய நிதி உதவியுடன் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர் மற்றும் பூமியில் உயிரினங்கள் வாழக் கூடியதாக மாற்றும் கால நிலை அனைத்தும் இயற்கையிலிருந்து வந்தவை ஆகும். இயற்கையினை நாம் அனைவரும் மிகுந்த அக்கறையடன் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கான தருணம் இதுவாகும்.

இயற்கையை பாதுகாக்க நாம் அனைவரும் மிகுந்த அக்கறையுடன் ஒன்றிணைந்து செயலாற்றுவது அதற்கான தருணம் இதுவாகும். உலக சுற்றுசூழல் தினம் கொண்டுடாடும் இந்நாளில் நம் சுற்றுப்புறத்தை பசுமையாக்கி, வெப்பமயமாதலை தவிர்த்து, காற்றின் மாசினை குறைத்து மற்றும் நீர்நிலைகளை பாதுகாத்து புவியில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் நலமுடன் வாழ்வதற்கு உறுதி ஏற்போம்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மரக்கன்றுகளை நட்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், பவானி ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, கவுந்தப்பாடி ஊராட்சி தலைவர் பாவாதங்கமணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கே.கே.விஸ்வநாதன், சிவகாமி சரவணன், பேரூராட்சி செயலாளர் எஸ்.ஏ.பாவாணன், அய்யம்பாளையம் சரவணன், தீபிகா, மணிசந்தோஷ் பரமசிவம், ஜீவா ராஜசேகர், அஷ்ரப் அலி, தங்கராசு, கே.என்.ஆறுமுகம், விஜய், எம்.எம்.சோமு, விஜயலட்சுமி, விஸ்வநாதன் உள்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.