தற்போதைய செய்திகள்

மண்மங்கலத்தில் ரூ. 54 லட்சத்தில் அணைகட்டு தூர்வாரும் பணி – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கிவைத்தார்.

கரூர்

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் செட்டிபாளையம் அணைக்கட்டினை ரூ.54 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கிவைத்தார்.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள அமராவதி ஆற்றின் அணைக்கட்டினை மாண்புமிகு முதலமைசர்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.54 இலட்சம் மதிப்பில் தூர்வாருதல், மதகு பகுதிகளை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழன் தலைமையில் கரூர் மாவட்ட கழக செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்துப் பார்வையிட்டார்.

பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் நல்லாட்சி நடத்திவரும் முதலமைச்சர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்வழிப்பகுதிகளை தூர்வார வேண்டுமென்று குடிமராமத்து என்ற மகத்தான திட்டத்தை அறிவித்து விவசாயிகளின் மனதில் குடிமராமத்து நாயகனாக திகழ்ந்து வருகிறார்.

அதனடிப்படையில், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் உத்தரவின் அடிப்படையில் பணிகள் தமிழகம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நடப்பாண்டில் அமராவதி வடிநிலக்கோட்டத்திற்கு ரூ.197.50 லட்சம் மதிப்பில் 6 பணிகளும், நங்காஞ்சியார் வடிநிலக்கோட்டத்திற்கு ரூ.16 லட்சம் மதிப்பில் 2 பணிகளும் மற்றும காவிரி வடிநிலக்கோட்டத்திற்கு ரூ.30 லட்சம் மதிப்பில் 2 பணிகளும் என மொத்தம் 10 பணிகளுக்கென்று ரூ.243.50 லட்சம் நிதிஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில் கடந்த 29.05.2020 அன்று பள்ளபாளையம் ராஜவாய்க்காலில உள்ள இடது கரை பாசன வாய்க்காலில் 700 மீட்டர் நீளத்திற்கு மண்டிக்கிடக்கும் முட்புதர்களை அகற்றி தூர்வாரும் பணி, வாய்க்காலின் கரைகளை பலப்படுத்தும் பணி, கரைகள் உடையாத வகையில் 127 மீட்டர் நீளத்திற்கு வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டும் பணி, வாய்க்காலின் தலைப்பு மதகில் உள்ள திருகு அடைப்பான்களை சரிசெய்யும் பணி, நீர்போக்கிகளை பழுதுநீக்கும் பணி உள்ளிட்ட ரூ.43.50 லட்சம் மதிப்பிலான பணிகள் துவக்கி வைக்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

அதே போல இன்று செட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள அமராவதி ஆற்றின் அணைக்கட்டினை ரூ.54 லட்சம் மதிப்பில் தூர்வாருதல், மதகு பகுதிகளை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அமராவதி ஆற்றின் வலதுகரை பாசன வாய்க்கால் செட்டிபாளையம் அணைக்கட்டிலிருந்து பிரிந்து அப்பிபாளையம், கருப்பம்பாளையம், சுக்காலியூர், செல்லாண்டிபாளையம், திருமாநிலையூர் சணப்பிரட்டி, மேலப்பாளையம் புலியூர், நத்தமேடு, கட்டளை மணவாசி ஆகிய கிராமங்கள் வழியாக மாயனூர் வரை சுமார் 33 கிலோ மீட்டர் தூரம் செல்கின்றது.

வலதுகரை பாசன வாய்க்காலில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு முட்புதர்களை அகற்றும் பணியும், வலுவிழந்துள்ள வாய்க்கால் மற்றும் ஆற்றின் பொதுகரை உடையாதவாறு 53 மீட்டர் நீளத்திற்கு வெள்ள தடுப்பு சுவர் கட்டும் பணியும், மற்றும் செட்டிபாளையம் அணைக்கட்டு வரத்து வாய்க்காலில் புனரமைக்கும் பணியும் ரூ.54 லட்சம் மதிப்பல் திருமாநிலையூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் நல சங்கம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இப்பணிகளை செயல்படுத்துவதன் மூலம் வலதுகரை வாய்க்காலில் கடைமடை பகுதி வரை பாசனத்திற்கு தண்ணீர் செல்வது உறுதி செய்யப்படும். இதன் மூலம் 5,400 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெறும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.