தற்போதைய செய்திகள்

ரேசன் பொருட்களில் குறைகள் இருந்தால் என்னிடம் தெரிவிக்கலாம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை

ரேசன் பொருட்களில் குறைகள் இருந்தால் என்னிடம் தெரிவிக்கலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் செயின்ட்மேரிஸ் பள்ளி அருகே 500 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.

நிவாரண உதவிகளை மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், கழக மாணவர் அணி இணைச்செயலாளர் பி.குமார், மற்றும் பதினெட்டான், எஸ்.டி.ஜெ.ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது;-

இந்த மூன்று மாத காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளையும் முதலமைச்சர் தினந்தோறும் வழங்கி வருகிறார். கடைக்கோடியிலும் அரசின் நிவாரண உதவி கிடைக்கவில்லை என்று எந்த மக்களும் கூறவில்லை. ஆனால் ஸ்டாலின் இந்த அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒன்றிணைவோம் திட்டத்தை உருவாக்கினார்.

ஆனால் அந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மேலும் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் செயல்படவில்லை. இவர் பிரசாந்த்கிஷோர் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார் என்று மக்களும் சொல்கின்றனர் தி.மு.க.வினரும் சொல்லி வருகின்றனர். ஆனால் நமது முதலமைச்சர் மக்களுக்காக இரவு பகல் பாராது உழைத்து வருகிறார். மக்கள் நலனே தன் நலன் என்று சிந்தித்து செயல்பட்டு வருகிறார்.

கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு வியாபாரிகளுக்கு வழங்கப்படும் 50,000ரூபாய் கடனுக்கான அரசாணை ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. கூட்டுறவு வங்கிகள் மூலம் கிட்டத்தட்ட 1952 கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்களுக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கியில் கடன் பெற குடும்ப அட்டையே போதும், மேலும் சிறு குறு வியாபாரிகளாக இருந்தால் போதும் அவர்களுக்கு கடன் வழங்கப்படும். கூட்டுறவு வங்கியில் கடன் இல்லையென்று சொன்னால் நான் நடவடிக்கை எடுக்கிறேன்.

56000 கோடி டெபாசிட் கூட்டுறவு வங்கிகளில் உள்ளது. பொதுமக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர் பொதுமக்களுக்கு வழங்கும் கடன் தொகையை அதிகரிக்க உத்தரவிட்டார். சிலர் எந்த ஆவணமும் இல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்டது விசாரணையில் தெரிய வந்தது. எந்த ஆவணமும் இல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்டால் எப்படி கொடுக்க முடியும்.

நியாயவிலைக்கடைகளில் குறைவாக அரிசி வழங்கினால், அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது நல்ல விஷயம் தான். பொதுமக்களுக்கு நல்ல தரமான அரிசியை கொள்முதல் செய்து கொடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மதுரையில் மட்டுமல்ல மாவட்டங்களில் உள்ள எல்லா கடைகளிலும் நல்ல தரமான, அரிசி வழங்கப்படும். நானே எல்லா கடைகளுக்கும் சென்று ஆய்வு நடத்த தயாராக உள்ளேன். அரிசி சரியில்லை என்றால் எனக்கு தகவல் கொடுத்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். நியாய விலைக்கடைகளில் தவறு எதுவும் நடக்காது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து 300 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கோரிப்பாளையத்தில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் அரிசி பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.