தற்போதைய செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெறும் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

மதுரை

இந்த 7 மாதத்தில் தி.மு.க. அரசின் சாயம் வெளுத்து விட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெறும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட கழகத்திற்குட்பட்ட 8 இடங்களில் கழக அமைப்பு தேர்தல் நடைபெற்றது.

பெத்தானிய புரத்தில் நடைபெற்ற தேர்தலின் போது கழக நிர்வாகிகளிடம் இருந்து விண்ணப்ப படிவங்களை முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ, மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வின் போது அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், பகுதி கழக செயலாளர்கள் பைக்காரா கருப்பசாமி, சோலைராஜா, எம்.முத்துவேல், தமிழ்ச்செல்வன் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதன்பின்னர் முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-
கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்டத்தில் உட்கட்சி தேர்தல் பணி நடைபெற்று வருகிறது. மதுரை மாநகர் மாவட்ட கழகத்தில் 25 பகுதி கழகங்கள் உள்ளன. இதில் 150 மாநகராட்சி வார்டுகள் உள்ளன. மேலும் பேரூராட்சியில் 15 வார்டுகளும், 29 கிளை கழகங்களும் இருக்கின்றன.

இந்த உட்கட்சி தேர்தலில் இளைஞர்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அடுத்த தலைமுறையை கையாளும் வகையில் இளைஞர்களுக்கு நாம் இக்காலத்தில் பயிற்சியை வழங்க வேண்டும். ஏனென்றால் இந்த இயக்கம் நூறாண்டுகள் அன்னை தமிழகத்தில் ஆள வேண்டும் என்ற அம்மாவின் லட்சிய கனவாகும். அதனை நோக்கியே கழகம் பீடு நடை போட்டுக்கொண்டிருக்கிறது
தி.மு.க-காங்கிரஸ் கட்சிகளை பொறுத்தவரை குடும்ப பார்வைபட்டால் தான் கட்சி பதவிக்கு வரமுடியும்.

ஆனால் கழகத்தில் அப்படி இல்லை. இந்த இயக்கத்திற்கு உழைத்தால் உயர் பதவிக்கு வரலாம். அதற்கு சான்று தான் கழக ஒருங்கிணைப்பாளர்கள். புரட்சித்தலைவர் மறைவுக்குப்பின் கழகத்தை அழித்துவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்தன. அதை முறியடித்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

அம்மாவின் மறைவிற்குப்பின் இந்த கட்சியை அழித்து விடலாம் என்று எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்தபோது அதை முறியடித்து கழகத்தை வழி நடத்தி வருகிறார்கள் ஒருங்கிணைப்பாளர்கள். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் எடுபடாது. ஏனென்றால் 7 மாதத்தில் தி.மு.க. அரசின் சாயம் வெளுத்து விட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெறும்.