தற்போதைய செய்திகள்

தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு

திருவாரூர்

முதலமைச்சர் எடப்பாடிகே. பழனிச்சாமி அரசின் சாதனைகளை தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அமைச்சர் ஆர்.காமராஜ் பேசி உள்ளார்.

திருவாரூர் மாவட்டம் ஆவூரில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

பேரறிஞர் அண்ணாவின் நோக்கங்களையும், கொள்கைகளையும் தாங்கி நிற்கும் இயக்கமாக கழகத்தை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். மறைந்த புரட்சித்தலைவி தனது செயல்திறனால், மாபெரும் மக்கள் இயக்கமாக வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுள்ளார். அவர்கள் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கழகத்தை வழிநடத்தி வருகின்றனர்.

அதுபோல் தமிழக அரசை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மிகவும் திறம்பட செயல்படுத்தி வருகிறார். உலகமே அஞ்சி நிற்கும் கொரோனாவிற்கு எதிராக கடும் போராட்டம் நடத்தி வருகிறார். இவரது தலைமையிலான தமிழக அரசின் திட்டமிட்ட செயல்பாடுகளால் கொரோனா உயிரிழப்புகள் பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் மிக குறைவாக உள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திருமண உதவி, மகப்பேறு உதவி, அம்ம உணவகம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் பசியின்றி வாழ வழியேற்பட்டுள்ளது.

உலக அளவில் சிறந்த நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முனைப்பு காட்டுகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் சாதனைகளை தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதுபோல் எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களையும் உரிய ஆதாரங்கள் மூலம் எதிர்கொண்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

இக்கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் கோபால், தகவல் தொழில்நுட்பப்பிரிவு மதுரை மண்டல பொறுப்பாளர் ராஜ்சத்யன், திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளர் சின்னராஜ், ஒன்றியக்குழு தலைவர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.