சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

நொய்யல் நதியை புனரமைக்கும் திட்டம் முடிவடைந்ததும் கொங்கு மண்டலத்தில் விவசாயம் மீண்டும் புத்துயிர் பெறும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை, ஜூன் 6-

நொய்யல் நதியை புனரமைக்கும் திட்டம் முடிவடைந்ததும் கொங்கு மண்டலத்தில் விவசாயம் மீண்டும் புத்துயிர் பெறும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றினை ரூ.230 கோடி மதிப்பீட்டில் விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமாயக்கல் பணியினை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் கடந்த 28ம்தேதியன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம், சித்திரைச்சாவடி அணைக்கட்டு, பேரூர் படித்துறை, சூலூர்- இரூகூர் பிரிவு பகுதியில் நொய்யல் ஆற்றினை புனரமைக்கும் பணிகளை நேற்று கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர், விவசாயிகளின் தேவை என்ன என்பதை முற்றிலும் உணர்ந்தவர் என்பதோடு, விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க நீர் வளத்தைப் பெருக்க வேண்டுமென்பதற்காகவே பல திட்டங்களையும் வகுத்து வருகிறார். நொய்யல் நதியை புனரமைக்கும் திட்டத்துக்குப் பின், கொங்கு மண்டலத்தில் விவசாயம் மீண்டும் புத்துயிர் பெறும்.

அதேபோன்று கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் நொய்யல் ஆற்றுப்படுகையிலுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் பெருகும். நிலத்தடி நீரின் தரமும் உயரும். கோவை மாநகரிலுள்ள நொய்யல் குளங்கள், ஏற்கெனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடையும் போது, கோவை நகரம் புதிய பொலிவை பெறுவேதோடு, இங்குள்ள பல லட்சம் மக்களுக்கு புதிய பொழுதுபோக்கு இடங்களாகவும் அமையும்.

நொய்யல் நதியினை மீட்டெடுக்கும் முயற்சியாக முதலமைச்சர் நொய்யல் ஆற்றினை சீரமைக்க ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நொய்யல் ஆற்றின் 72கி.மீ நீளபகுதிகளை சீரமைக்க ரூ.174 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இச்சீரமைப்பு பணிகளில் நொய்யல் ஆற்றில் உள்ள அணைக்கட்டுகளும், குளங்களும், சிதிலமடைந்த அணைக்கட்டின் பகுதிகள், மதகுகள் புதுப்பித்தல், நீர்வரத்து பள்ளங்களை புதுப்பித்தல், தடுப்பணைகள் ஏற்படுத்துதல், குளங்களை தூர்வாருதல், ஆற்றினை தூர்வாருதல் போன்ற அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும்.

மேலும், நொய்யல் ஆற்றில் நேரடியாக கழிவுகள் கலப்பதை அந்தந்த மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் நகரப் பகுதிகளின் சாக்கடை ஆற்றில் கலப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நொய்யல் மூலமாக ஏற்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை கட்டமைப்புகளை சீரமைக்கும் பட்சத்தில் நிலத்தடி நீர் அதிகமாகி நொய்யல் மீண்டும் உயிர் பெறும்.

நொய்யல் ஆறு புனரமைக்கும் பணியை நேரடியாக கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவில் பொதுப்பணித்துறை-நீர்வள ஆதாரம், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகிய அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் இக்குழுவில் இடம்பெற உள்ளனர். இக்குழுவானது அரசு திட்டமிட்டபடி நொய்யல் நதி புனரமைத்தல், விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கும் பணிகளை நேரடியாக கண்காணித்து பணிகளை மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது.

நமது ஊரக பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், ஆறுகள், சிற்றோடைகள் போன்றவற்றினை சீரமைத்து உயிர்ப்பிப்பதன் மூலம் தண்ணீர் தேவையில் தன்னிறைவு பெற இயலும். எனவே, நீர் ஆதாரங்களைக் காப்பது, நமக்கான பணி மட்டுமில்லை நம் சந்ததிக்கு விட்டுச் செல்கின்ற மாபெரும் சொத்து. இணைந்து செயல்படுவோம் நீர்ஆதாரங்களை மீட்போம். நம் தலைமுறைக்கு இயற்கையின் கொடைகளை பரிசாகக் கொடுப்போம்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, இருகூர் பேரூராட்சியில் ஐயுடிஎம் திட்டத்தின் கீழ் திருச்சி சாலையிலிருந்து இராவத்தூர் செல்லும் சாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.387 லட்சம் மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.