சிறப்பு செய்திகள்

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆழியாறு, பவானிசாகர் அணைகளில் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு

சென்னை

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசன வசதிக்காக ஆழியாறு, பவானிசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு பழைய ஆயக்கட்டு ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி ஆனைமலை வட்டார ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் நலச் சங்கம் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு 5 பழைய வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல்போக பாசனத்திற்கு 7.6.2020 முதல் 31.10.2020 முடிய 146 நாட்களுக்கு, தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்தினைப் பொறுத்து, ஆழியாறு அணையிலிருந்து 1156 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வட்டத்தில் உள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, 1.2.2020 முதல் 120 நாட்களுக்கு7776 மி.கன அடி தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டிருந்தேன்.

தற்போது தொடர்ந்து தண்ணீர் திறந்து விடுமாறு கொடிவேரி விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து 6.6.2020 முதல் 15.6.2020 முடிய 10 நாட்களில் 7 நாட்கள் மட்டும் பாசனத்திற்கு நீர் விநியோகம் செய்தும், 3 நாட்கள் இடைநிறுத்தம் செய்தும், 241.92 மில்லியன் கனஅடி தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி மற்றும் அந்தியூர் வட்டங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.