சிறப்பு செய்திகள்

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக்குழு – முதலமைச்சர் உத்தரவு

சென்னை

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவலைத் தடுக்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து வருகிறார்.
தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறார்.
கொரோனா நோய் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் மக்கள் பாதிக்காத வகையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000 மற்றும் விலையில்லா அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துச் செயல்படுத்தினார்.

நடமாடும் காய்கறி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கோயம்பேடு வணிக வளாகம் தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டுள்ளது. முதலமைச்சரால் அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர் குழுக்கள் அவ்வப்போது முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி பல்வேறு ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை அளித்து வருகிறது.

இதன்படி தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் உள்ளது. பரிசோதனைகள் அதிக அளவில் செய்யப்படுகிறது.மேலும் நோய்த் தொற்று அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக இனம் காணப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.மேலும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு கட்டாய பரிசோதனை செய்யப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். தொடர்ந்து பல்வேறு கூட்டங்கள் முதலமைச்சரால் நடத்தப்பட்டு,நோய்த் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரை முதலமைச்சர் நியமித்துள்ளார்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களும் ஐந்தாகப் பிரித்து ஒவ்வொரு அமைச்சருக்கும் மூன்றாகப் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய மண்டலங்களும், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களும்,

உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜுக்கு அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களும், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு திருவொற்றியூர், மணலி, திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் ஆகிய மண்டலங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவைத் தலைமைச்செயலாளர் க.சண்முகம் பிறப்பித்துள்ளார்.