தற்போதைய செய்திகள்

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 5 மகளிர் குழுக்களுக்கு ரூ.3.20 லட்சம் கடன் உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்

திருச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பாக, 5 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த 64 நபர்களுக்கு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான, கொரோனா சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் ரூ.3,20,000 கடன் உதவியை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

திருச்சிராப்பள்ளியில் கூட்டுறவுத்துறையின் மூலம் 8 மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு விவசாயிகளுக்குத் தேவையான பயிர்க்கடன் இடுபொருட்கள் வழங்குவது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்கள், கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள் ஆகியோர்களுடன் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு விவசாயிகளுக்கு தேவையான பயிர்க்கடன் இடுபொருட்கள் வழங்குதல் தொடர்பான 8 மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்கள், மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுடனான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் முன்னிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தார்.

இதன்பின்னர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொன்மலைப்பட்டியில் மத்திய கூட்டுறவு வங்கியின் 74வது வங்கிக் கிளையை புதிதாக தொடங்கி வைத்தும், சுப்ரமணியபுரத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஆய்வு செய்தும், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தேவையான விவசாயிகளுக்கு பயிர்க்கடன் இடுபொருட்கள் வழங்குதல் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 74-வது கிளையாக, பொன்மலைப்பட்டி கிளை திறந்துவைக்கப்பட்டது. இக்கிளையின் மூலம், 29,000 பொதுமக்கள் பயன்பெறுவர். அதன் பின்னர், திருச்சிராப்பள்ளி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை (அமராவதி) பண்டகசாலையின், சுப்ரமணியபுரம் நியாயவிலைக் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது குறித்தும், விற்பனையாளர்கள், கையுறை, முகக்கவசம், கிருமிநாசினி பயன்படுத்துவது குறித்தும், பொதுமக்கள், சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசத்துடன் நியாயவிலைக் கடைக்கு வருவது குறித்தும் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேட்டறிந்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பாக, 5 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த 64 நபர்களுக்கு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான, கொரோனா சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் ரூ.3,20,000 கடன் உதவியை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

முன்னதாக, 13.05.2020 அன்று கோவிட் 19 கொரோனா தடுப்பு பணி முடித்து திரும்பி வரும் வழியில் சாலை விபத்தில் உயிரிழந்த திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சிறுகமணி (மேற்கு) கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த குமார் என்பவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ.50,00,000 வழங்கி ஆணையிட்டுள்ளார். அதன்படி அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் உயிரிழந்த குமார் என்பவரின் மனைவி கற்பகத்திற்கு ரூ.12,50,000ம் வைப்புத்தொகையாகவும், மகன் கோகுலனுக்கு ரூ.25,00,000 வைப்புத்தொகையாகவும், தாயார் கந்தம்மாளுக்கு ரூ.12,50,000 வங்கி வரைவோலையாகவும் வழங்கினர்.

இக்கூட்டத்தில் கூடுதல் பதிவாளர் (நிதி மற்றும் வங்கியியல்) எம்.அந்தோணிசாமி ஜான் பீட்டர், தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர், மேலாண்மை இயக்குநர் ஆர்.ஜி.சக்திசரவணன், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் கூடுதல் பதிவாளர், மேலாண்மை இயக்குநர் எம்.முருகன், கூடுதல் பதிவாளர்(விற்பனை திட்டம் மற்றும் வளர்ச்சி) கு.ரவிக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டிஎன்டி.நடேசன் மற்றும் டெல்டா மாவட்ட மண்டல இணைப்பதிவாளர்கள், மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.