தற்போதைய செய்திகள்

ஆரணியில் 1 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி முழுவதும் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மூட்டைகளை சிறப்பு நிவாரணமாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்திருந்ததால் பொதுமக்கள் பலருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுமார் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு நிவாரணமாக தனது சொந்த செலவில் வழங்க முடிவு செய்தார். ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி வீதம் வழங்கினார். இந்த சிறப்பு நிவாரணத்தை ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் பொதுமக்களுக்கு வழங்கி துவங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆரணி நகரப்பகுதியில் 16221 குடும்பங்களுக்கும், ஆரணி ஒன்றியப்பகுதியில் 30574 குடும்பங்களுக்கும், மேற்கு ஆரணி ஒன்றியப்பகுதியில் 32581 குடும்பங்களுக்கும், கண்ணமங்கலம் பேரூராட்சியில் 2383 குடும்பங்களுக்கும், செய்யார் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரணி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 10742 குடும்பங்களுக்கும் தலா 5 கிலோ அரிசி பொதுமக்களுக்கு நிவாரணமாக வழங்கப்படுகிறது.

இந்த நிவாரண அரிசி வழங்குவதை முள்ளண்டிரம் கிராமத்தில் துவங்கப்பட்டது. மேலும் ஆரணி தொகுதி முழுவதும் அனைவரின் வீடுகளுக்கும் கட்சியினர் நேரிடையாக எடுத்து சென்று வழங்குவார்கள். ஆரணி பகுதியில் ஊரடங்கு தொடக்கத்திலிருந்து சலவை தொழிலாளர்கள், முடிதிருத்தம் செய்வோர், தூய்மை பணியாளர்கள், தனியார் வாகன ஓட்டுநர்கள், புகைப்பட கலைஞர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், இருளர்கள் மற்றும் நலிந்தவர்கள் என 10000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பிஆர்ஜி.சேகர், அரசு வழக்கறிஞர் க.சங்கர், மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் அ.கோவிந்தராசன், நகர செயலாளர் எ.அசோக்குமார், மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் எம்.வேலு, மாவட்ட பாசறை செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், மேற்கு ஆரணி ஒன்றிய குழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன். ஊராட்சி தலைவர் பழனி, ஒன்றியகுழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.