தற்போதைய செய்திகள்

விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை – சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

சென்னை

விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெரு, தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மற்றும் நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் நிர்வாக ஆணையரும் சென்னை மாநகருக்கான கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

நேரு நகர் பகுதியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் ஆய்வு மேற்கொண்டு அங்கு தரப்படக்கூடிய மருந்துகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கு இருந்த நடமாடும் கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு செய்தார். அப்பகுதியில் உள்ள அனைவரையும் பாதுகாப்பாக முகக்கவசம் அணியவும் அவர் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தினமும் 1000 பேர் நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் போது பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. அதனை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை. சென்னையில் உள்ள தெருக்களில் 16.53 விழுக்காடு தெருக்களில் மட்டும் தான் நோய் தொற்று வந்துள்ளது.நோயாளிகளை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் நோய் தொற்று பரவுவதை தடுக்கிறோம்.

மக்களுக்கு அறிவுரையாகவும் ஆணையாகவும் உலக சுகாதார நிறுவனம் அளித்த வழிகாட்டுதலின் அடிப்படையில் மக்கள் இயக்கமாக இந்த தொற்றை ஒழிக்க பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறோம். தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் பரிசோதனை அதிகரித்துள்ளதாகவும் மத்திய குழு தெரிவித்துள்ளது.

விதிமுறைகளை மீறி நடப்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்று பரவல் தடுப்பு என்பது மக்கள் இயக்கமாக மாறினால் மட்டுமே இந்த நோய் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். தெருவாரியான தகவல்கள் கண்டறியபட்டு அதற்கேற்றபடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தெருக்கள் தோறும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.