தற்போதைய செய்திகள்

கரூரில் விவசாயிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.82.51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்

கரூர்

கரூரில் விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.82.51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். அதன் விபரம் வருமாறு:-

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் கூட்டுப்பண்ணையத்திட்டம் மூலம், உழவர் உற்பத்தியாளர் குழுவைச்சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12.51 மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியோடு, நல்லாட்சி நடத்திவரும் முதலமைச்சரும் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகளின் நலன் கருதி எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.

கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் கடைமடை வரை சென்று விவசாயத்திற்கு முழுமையாக பயன்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் குடிமராமத்து என்ற சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தி குடிமராமத்து நாயகனாக மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளவர் முதலமைச்சர்.

கரூர் மாவட்டத்தில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கூட்டுப்பண்ணையத்திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்களை வாங்குவதற்காக ஒவ்வொரு குழுவிற்கும் தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தில் 100 விவசாயிகள் இணைந்து ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுவாக செயல்படுவர். வருடத்திற்கு 25 குழுக்களைச் சேர்ந்த 2500 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.1.25 கோடி நிதியாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிதியில் இருந்து விவசாயிகள் தங்கள் குழுக்களுக்குத் தேவையான வேளாண் இயந்திரங்களை வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வேளாண் இயந்திரங்களை மற்ற விவசாயிகளுக்கு வாடகைக்கு கொடுத்தும் பயன்படுத்தலாம். இதன் மூலம் வரும் வருவாயின் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தங்கள் குழுக்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.

ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவும் ஒரேமாதிரியான இரகத்தைச் சேர்ந்த பயிர்களை அதிக பரப்பில் சாகுபடி செய்யும் போது, வேளாண் இடுபொருட்களை கூட்டாக கொள்முதல் செய்வதன் மூலம் இடுபொருட்களின் விலை குறைவதோடு, போக்குவரத்துக்கான செலவினமும் குறைகிறது. உயரிய தொழில்நுட்பங்களை ஒருசேர கடைபிடித்து கூட்டாக சாகுபடி செய்து, தரமான விளை பொருட்களை உற்பத்தி செய்து, அதற்கு விலை நிர்ணயம் செய்யவும் மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தவும் ஏதுவாகிறது.

கடந்த 2017-18-ம் நிதியாண்டில் 24 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.120 லட்சம் மதிப்பிலும், 2018-19-ம் நிதியாண்டில் 25 குழுக்களுக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலுமான நிதி வழங்கப்பட்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்களால் 228 வேளாண் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2019-2020-ம் நிதியாண்டில் 25 குழுக்களுக்கு 127 வேளாண் இயந்திரங்கள் வாங்க ரூ.1.25கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இன்று கரூர், தாந்தோணி, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, க.பரமத்தி ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலான டிராக்டர், ரோட்டவேட்டர், பவர் வீடர், ரீப்பர், கல்டிவேட்டர் உள்ளிட்ட 48 வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.71 லட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்களும், 48 நபர்களுக்கு ரூ.1.80லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டது.புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில், முதலமைச்சர் ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கு நலத்திட்டங்களை வாரி வழங்கி வருகின்றார்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், வேளாண்மை இணை இயக்குநர் கோ.வளர்மதி, கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.கே.ஜெயராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.உமாபதி, வேளாண்மை துணை இயக்குநர்கள் இரா.உமாராணி, சு.துரைசாமி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சு.ராஜகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.