தற்போதைய செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் 394 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.29 கோடி வங்கி கடனுதவி – அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட வேலங்குடி, கீரனூர், மேனாங்குடி, கோயில் திருமாளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு நேரடி வங்கிக்கடன் வழங்கும் நிகழ்ச்சியில் 394 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவியை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

மக்கள் ஏற்றம் பெறும்வகையில் சீரிய முறையில் திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்துவதுதான் உண்மையான மக்கள் நலன் நாடும் அரசின் கடமையாகும் என்ற புரட்சித்தலைவி அம்மா தமிழகம் வளம் பெறுவதையும், தமிழக மக்கள் நலன் பெறுவதையும் தனது ஒரே குறிக்கோளாக கொண்டு மகளிருக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கிடவும் அதன் மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடனும், ஏழை, எளிய நலிவுற்ற மக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்க்காக தமிழக ஊரக வாழ்வதார இயக்கம் துவக்கியதன் பயனாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழ்நாட்டில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

இதுபோன்று மகளிர்களின் வாழ்வில் ஒளியேற்றுகின்ற வகையில் புரட்சித்தலைவி அம்மா தந்திட்ட எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தியும், புதிய திட்டங்களை வகுத்தும், மகளிர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக செயலாற்றி வருகிறார் முதல்வர். அதனடிப்படையில், மகளிர்கள் மேம்பாடு அடைய சுயமாக தொழில் தொடங்கி தங்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தி கொள்வதற்காக வங்கிகடன் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நடப்பு வருடம் தமிழகம் முழுவதும் ரூ.20,000 கோடி வங்கி கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் ரூ.413 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மகளிர்களுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கடகம், காளியாக்;குடி, பாவட்டக்குடி, திருக்கொட்டாரம், வேலங்குடி, அன்னதானபுரம், கீரனூர், சிறுபுலியூர், தலையூர், கடுவங்குடி, கொல்லாபுரம், குருங்குளம், மேனாங்குடி, ரெட்டக்குடி, உபயவேதாந்தபுரம், செம்பியநல்லூர், கோவில்திருமாளம், கொத்தவாசல், செருவலூர், மஹாராஜாபுரம் ஆகிய ஊராட்சிகளை சார்ந்த 394 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பிலான வங்கிகடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

இந்நிகழ்வில் மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆசைமணி, ஒன்றிய குழுத்தலைவர் விஜயலட்சுமி குணசேகரன், ஒன்றிய குழு துணைத்தலைவர் சி.பி.ஜி.அன்பு, முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் எம்.சம்பத், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.