கன்னியாகுமரி

முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை – என்.தளவாய் சுந்தரம் தகவல்

கன்னியாகுமரி

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு சென்று குளச்சல் மீன்பிடித்துறைமுகம் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடித்துறைமுகம், அப்பகுதியிலுள்ள கொட்டில்பாடு, புதூர், சைமன்காலனி, வாணியக்குடி, குறும்பனை உள்ளிட்ட சுமார் 10 மீனவ கிராமங்கள் அதனைச் சுற்றியுள்ள சிறுகிராமங்களை சார்ந்த, மீனவர்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகிறது. இத்துறைமுகத்தில், கேரளாவை சார்ந்த மீன்பிடி படகுகளும், இத்தொழிலில் குளச்சல் மேலாண்மை சங்கத்தை சார்ந்த 163 விசைப்படகுகளும், சங்கத்தை சாராத விசைப்படகுகளும் குளச்சல் துறைமுகத்தில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இத்துறைமுகத்தின் வாயிலாக, பிடிக்கப்படும் மீன்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலமான கேரளாவிற்கும், வெளிநாடுகளுக்கும் கொண்டு சென்று வர்த்தகம் நடைபெறுகிறது.

இத்துறைமுக படகு அணையும் தளத்தில், சுமார் 30 விசைப்படகுகள் மட்டும் நிறுத்துவதற்கு வசதி உள்ளது. இதில், நாளொன்றுக்கு 20 விசைப்படகுகள் மட்டுமே தாங்கள் கொண்டுவந்த மீன்களை வர்த்தகம் செய்ய முடியும். ஆனால், தற்போது, 200-க்கும் அதிகமான விசைப்படகுகளும், 400-க்கும் அதிகமான நாட்டுப் படகுகளும், இத்துறைமுகத்தின் வாயிலாக, மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாநிலங்களிலிருந்தும், அதிகளவில் மீன்பிடி படகுகள் இங்கு வருவதால், இட நெருக்கடி அதிகமாக ஏற்படுகிறது. இதனால், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டுமெனவும், விரிவாக்கம் ஏற்படுத்துவதற்கான ஆய்வு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனவும், குளச்சல் பங்குதந்தை மரியசெல்வம், விசைப்படகு சங்கத்தலைவர் பிரான்சிஸ், துணைத்தலைவர் அந்தரியாஸ், செயலாளர் பிராங்கிளின், பொருளாளர் ஜெயசீலன், மீனவரணி கழக செயலாளர் ஆன்றோ ஜாக்சன், குளச்சல் நகர கழக செயலாளர் ஆன்றோஸ், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சுரேஷ் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரத்திடம் தோவாளை அலுவலகத்தில் 04.06.2020 அன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் கவனத்திற்கு, குளச்சல் துறைமுக விசைபடகு சங்கம் மற்றும் துறைமுக நடவடிக்கை குழு நிர்வாகிகள் ஆகியோரின் கோரிக்கையினை எடுத்துச் சென்று, அப்பகுதி மீனவ மக்களின் சிரமங்களை களைவதற்கும், துறைமுகம் விரிவாக்கம் செய்வதற்கும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக, குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திட ரூ.15.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தப்புள்ளி, அடுத்தவாரம் கோரப்பட்டுள்ளது.

மேலும், மீனவ மக்களுக்காக, பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தி, செயல்படுத்தி வந்த புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் முதலமைச்சர் குமரி மாவட்ட மீனவ மக்களுக்கு நண்பனாகவும், உறுதுணையாகவும், என்றென்றும் இருப்பார்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையப்பெருந்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியப் பெருந்தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார் உள்ளிட்ட மீனவர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.