தற்போதைய செய்திகள்

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டட பணி – அமைச்சர் பி.தங்கமணி நேரில் ஆய்வு

நாமக்கல்

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி புதிய கட்டட பணிகளை அமைச்சர் பி.தங்கமணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ், காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வருவாய்த்துறையில் பணி புரிந்து பணியின் போது இறந்த நபரின் மகளுக்கு இளநிலை உதவியாளர் பணிக்கான பணி ஆணையினை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.338.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அலுவலக கட்டடம், விடுதி கட்டடங்கள், மருத்துவமனை கட்டடங்கள் உள்ளிட்ட கட்டடங்களுக்கான கட்டுமான பணிகள் விரைந்து நடைபெற்று வருவதை அமைச்சர் பி.தங்கமணி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஆர்.சாரதா, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, துணை இயக்குநர் (சுகாதாரம்) சோமசுந்தரம், இணை இயக்குநர் மருத்துவப்பணிகள் த.கா.சித்ரா, நாமக்கல் மாவட்ட கழக அவைத்தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவருமான பி.ஆர்.சுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.