தற்போதைய செய்திகள்

திருப்பத்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஜூன் மாதத்திற்குள் முடித்திட வேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் கே.சி.வீரமணி உத்தரவு

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை வரும் ஜூன் மாதத்திற்குள் முடித்திட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறப்பு அலுவலகத்தில் தற்காலிகமாக இயங்கிட வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி துவக்கி வைத்து குத்துவிளக்கேற்றினார். இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் ஒத்திவைக்க்பட்ட 11 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத உள்ள சுமார் 70 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து தேர்வுகளை எழுதிட அரசு ஆணையின்படி கையுறை மற்றும் கிருமி நாசினியை அமைச்சர் கே.சி.வீரமணி பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைத்தார்.

இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தனியார் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் 500 நபருக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தன்னுடைய சொந்த செலவில் கொரோனா ஊரடங்கு தடை கால நிவாரணமாக 10 கிலோ அரிசி தொகுப்பினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன்அருள் கலந்து கொண்டார்.

பின்னர் அமைச்சர் திருப்பத்தூர் நகராட்சியில் ரூ.104 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். திருப்பத்தூர்; ஜார்ஜ்பேட்டையில் அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளையும், கௌதம்பேட்டை மஞ்சள் கிடங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் சாக்கடை உந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் பணி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

திருப்பத்தூர் நகராட்சியில் ரூ.104 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பணிகள் 97 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. மொத்தம் 85 கி.மீ. நீளத்திற்கு 36 நகர வார்டு பகுதி சாலைகளில் குழாய் பதிக்கும் பணிகளில் 86.5 கி.மீ. நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. சுமார் 350 மீட்டர் நீளத்திற்கு மட்டும் நெடுஞ்சாலையில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

மேலும் 10930 குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படுவதில் தற்போது வரை 9833 குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1100 குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. கழிவுநீர் உந்து நிலையம் கட்டமைப்புகள் 7 ல் 6 முடிக்கப்பட்டுள்ளது எஞ்சியுள்ள ஒரு பணி நடைபெற்று வருகின்றது. சுத்திகரிப்பு நிலையத்தில் கட்டமைப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்து சிறிய பணிகள் மட்டும் நடைபெற்று வருகின்றது.

தற்போது மின்இணைப்பு பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளது. விரைவாக இணைப்பு வழங்கிட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் 30.06.2020க்குள் முடித்து சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் மற்றும் ஒப்பந்ததாரர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தெரிவித்தனர்.

எஞ்சியுள்ள பணிகளை தரமாகவும் வேகமாகவும் முடித்து சோதனை ஓட்டங்களை உடனடியாக மேற்கொண்டு பிரச்சனைகள் வரும் இடங்களில் உடனடியாக நிவர்த்தி செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் இதனை கண்காணித்திட நகராட்சி பணி மேற்பார்வையாளர் ஈடுபடுத்தப்பட்டு முன்னேற்றப் பிரச்சனை குறித்து நாள்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவரருக்கு தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து கொரோனா வைரஸ் ஊரடங்கு தடை நாட்களில் புலம் பெயர்ந்த அஸ்ஸாம் மாநில தொழிலாளர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் 86 பேர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 464 தொழிலாளர்கள் மொத்தம் 550 நபர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஜோலார்பேட்டை ரயில் நிலைத்தில் இருந்து தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயிலை அமைச்சர் கே.சி.வீரமணி கொடியசைத்து பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.விஜயகுமார், இணை இயக்குநர் கூடுதல் பொறுப்பு மகேந்திரபிரதாப் தீட்ஷித், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் சுப்பிரமணி, துணைத்தலைவர் மரு.விஐய், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற் பொறியாளர் செல்வராஜ், விவிவி.கன்ஸ்ட்ரக்சன் திட்ட மேலாளர் திரு.செல்லமாரியப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் ராமஜெயம், நேர்முக உதவியாளர் வில்சன் இராஜசேகர், பள்ளி துணை ஆய்வாளர் தாமோதரன், மற்றும் ஜோலார்பேட்டை சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.