தற்போதைய செய்திகள்

1.45 லட்சம் பேருக்கு ரூ.29.43 கோடி நலத்திட்ட உதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர்கபீல் தகவல்

தர்மபுரி,

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் , தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் ஆகியோர் பதிவுபெற்ற 2135 தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இவ்விழாவில் அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் பேசியதாவது:-

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் பதிவுபெற்ற 2135 தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காலத்தில் 1982 ம் ஆண்டு தொழிலாளர்கள் நிலைமையை அறிந்து அப்போதைய முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் உழைப்பு நலசங்கத்தை துவக்கினார். புரட்சித்தலைவி அம்மா கட்டுமான நலவாரியத்தை தொடங்கினார். தமிழக தொழிலாளர்கள், வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நலதிட்ட உதவி வழங்கப்படுகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டடத் தொழிலாளர்கள் பணியின் போது இறக்க நேரிட்டால் ரூ.1 லட்சம் என்றிருந்த நிவாரணத்தை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கினார். இப்போது பணியின் போது காயம் அடைந்து சிகிச்சையின் போது இறக்கும் தொழிலாளர்களுக்கும் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வாழும் கட்டுமான தொழிலாளர்கள் தங்குவதற்கு தையூர் ஏழுச்சூர் ஆகிய இடங்களில் தங்கும் இடம் கட்டப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் முதற்கட்டமாக 25,000 தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000- மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் தலைகவசம் (ஹெல்மெட்), கண்கண்ணாடி, மேலுறை (கோட்), கையுறை மற்றும் காலணி அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் ஓய்வு எடுப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு கட்டுமான தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கட்டுமான தொழிலாளர்கள் தங்களுடைய அடையாள அட்டையை மட்டும் அம்மா உணவகங்களில் காண்பித்து விலையில்லாமல் உணவு உண்ணலாம்.

கொரோனா பாதிப்பால் நலிவடைந்த கட்டுமான தொழிலாளர்கள் சுமார் 12 லட்சம் பேருக்கு மேல் வங்கிக் கணக்கிற்கு ரூபாய் 2000 அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள மற்ற 15 வாரியங்களை சார்ந்த சுமார் 13 லட்சம் பேருக்கு அவர்களின் வங்கிக் கணக்கிற்கும் தலா ரூபாய் 2000 மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது மேலும் அவர்கள் பாதுகாப்பாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுமார் 2 லட்சத்து 15 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் ஒரு லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு 25 கோடியே 69 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது. 16385 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 3 கோடியே 27 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 2317 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 46 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 177 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 29 கோடியே 43 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 17 வாரியங்களை சார்ந்த அனைத்து தொழிலாளர்களின் நலனிலும் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் நிலோபர் கபீல் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி,சென்னை தொழிலாளர் ஆணையர் டாக்டர்.ஆர்.நந்தகோபால், பாப்பிரெட்டிபட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஆர்.செந்தில்குமாரி, சேலம் தொழிலாளர் இணை ஆணையர் எல்.ரமேஷ், தருமபுரி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் பூக்கடை பெ.ரவி, தருமபுரி கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் பொன்னுவேல், வருவாய் கோட்டாட்சியர் (பொ) ஆ.தணிகாசலம், தருமபுரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி இயக்குநர் சிவபிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.