தற்போதைய செய்திகள்

ஸ்டாலின் தினம்தினம் பித்துப்பிடித்து ஏதாவது ஒரு பொய்யை உளறுகிறார் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு

மதுரை

அரசுக்கு எப்படியாவது கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டுமென்று ஸ்டாலின் பித்துப்பிடித்து தினம்தினம் ஏதாவது ஒரு பொய்யை உளறுகிறார் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடுமையாக தாக்கி பேசினார்.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க, மதுரை மாநகர் மாவட்டத்தில் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கி வரும் வேளையில், கழக மாணவரணி சார்பில் 72 ஆவது வட்ட கழகத்தில், கழக மாணவர் அணி இணைச் செயலாளர் பி. குமார் தலைமையில் 1,000 பேருக்கு அரிசி, காய்கறி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகிய நிவாரண தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிவாரண தொகுப்புகளை மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக செய்தி தொடர்பாளர் அண்ணாத்துரை, மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், வட்ட கழக செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஜோசப் தனுஷ்லால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்ததாவது:-

அரசின் சார்பில் மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வரும் வேளையில் கழகத்தின் சார்பிலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க பொதுமக்களுக்கு இதுபோன்ற நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த கொரோனா தொற்று நோயை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து முதலமைச்சர் சிறப்பாக பணியாற்றி வருவதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பாராட்டி வருகின்றன. மக்களும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் இந்த நோயைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் முதலமைச்சரின் அறிவுரைகளை நீங்கள் பின்பற்றினால் போதும் உங்களை நீங்களே காத்துக் கொள்ளலாம்.

மேலும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள், ரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் முதியோர்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். தமிழகத்தில் தான் நோயினால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளன. தற்போது கூட மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 40பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.மதுரையில் ரேஷன் கடையை ஆய்வு செய்தது போல் திருச்சியிலும் ரேஷன் கடையில் நான் ஆய்வு மேற்கொண்டேன். மக்களுக்கு தேவையான அரிசியை தரமாகவும், எடை குறைவில்லாமல் வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அதிகாரியின் குழு ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்பொழுது திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று நோய் ஏற்பட்டுள்ளது, முதலமைச்சர் தொலைபேசி மூலமாக மருத்துவரிடம் கேட்டறிந்தார், சுகாதாரத்துறை அமைச்சரும் நேரில் சென்று விசாரித்தார். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சீக்கிரம் நலம் பெற வேண்டும் என்று துணை முதலமைச்சரும் டுவிட்டரில் பதிவு செய்து இருந்தார். எதிர்க்கட்சியாக இருந்தாலும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவர்களுக்கு உதவும் ஒரு சிறந்த அரசாக அம்மாவின் அரசு செயல்படுகிறது. அதற்கு இதுவே சாட்சி.

இந்த அரசுக்கு எப்படியாவது கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டுமென்று ஸ்டாலின் தினம்தினம் பித்துபிடித்து ஏதாவது ஒரு பொய்யை உளறி வருகிறார். தற்போது மின்கட்டணம் குறித்து பேசியுள்ளார். அதற்கு தகுந்த விளக்கத்தை மின்சாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆகவே ஸ்டாலின் எத்தனை பொய் சொன்னாலும் மக்களிடம் எடுபடாது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.