தற்போதைய செய்திகள்

கரூர் மாவட்டம் வாங்கல் வாய்க்காலில் தூர்வாரும் பணிகள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

கரூர்,

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட செவ்வந்திபாளையம் பகுதியில் வாங்கல் வாய்க்காலில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணியை கரூர் மாவட்ட கழக செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்வழிப்பகுதிகளை தூர்வார வேண்டுமென்று பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். அதனடிப்படையில் வாங்கல் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மண்மங்கலம் வட்டத்தில் காவிரி ஆற்றின் வலது கரையில் இருந்து சுமார் 10 மைல் தொலைவிற்கு சென்று கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளது வாங்கல் வாய்க்கால். இந்த வாய்க்கால் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை காவிரி வடிநிலக்கோட்டத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது, வாய்க்காலின் உட்புறங்களில் ஆங்காங்கே செடிகொடிகள் அதிகம் படர்ந்துள்ளதாலும், கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக ஆங்காங்கே மணல் திட்டுகள் உருவாகியிருப்பதாலும் தண்ணீர் செல்ல தடையாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில், நடப்பாண்டிற்கான பராமரிப்பு நிதியில் இருந்து ரூ.7.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதனடிப்படையில் வாங்கல் வாய்க்காலை தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், வாங்கல் வாய்க்காலின் தலைப்பில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்று பாசன நிலங்களுக்குப் தடையின்றி வழங்கப்படும். இதன்மூலம் சுமார் 12 ஏக்கர் நிலங்கள் முழுவதும் பாசன வசதிபெறும். அதுமட்டுமல்லாது, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் ஆதாரம் பெருகும் நிலை ஏற்படும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ், உதவி பொறியாளர் ஸ்ரீதர், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, கரூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பாலமுருகன், நெரூர் வாங்கல் வாய்க்கால் பாசன சங்கத்தலைவர் முத்துக்குமாரசாமி, புகளூர் வாய்க்கால் பாசன சங்கத்தலைவர் எம்.நடராஜன், நன்னியூர்புதூர் தொடங்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் மதியழகன், கூட்டுறவு சங்கப்பிரதிநிதி என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.