சிறப்பு செய்திகள்

பேரூர் பட்டீஸ்வரத்தில் ரூ.11.02 கோடியில் தர்ப்பண மண்டபம் கட்டும் பணி – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை

கோவை மாவட்டம், பேரூர், பட்டீஸ்வரர் கோவில் படித்துறையில் இந்து அறநிலையத்துறை மற்றும் நல்லறம் அறக்கட்டளை சார்பில் ரூ.11.02 கோடி மதிப்பீட்டில் தர்ப்பண மண்டபம் கட்டுதல் மற்றும் பல்நோக்கு வசதிகள் மேற்கொள்ளும் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

இந்து சமய அறநிலையங்கள் துறையில் கீழ் இயங்கும் திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, புனரமைக்கும் பணி, ஒரு கால பூஜை திட்டம், மற்றும் திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம், கிராமத் திருக்கோயில் பூசாரிகள் நல்வாழ்வுத் திட்டம், மற்றும் கிராமப்புறத் திருக்கோயில் திருப்பணிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

கோவை மாவட்டத்தில் முக்கிய திருத்தலங்களில் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ஒன்றாகும். இதன் அருகில், ஓடும் நொய்யலாற்றில் பதினெட்டு படிகள் கொண்ட சோழன் படித்துறை உள்ளது. வரலாற்றுப் புகழ்பெற்ற இந்த படித்துறையில் ஆடிப் பெருக்கன்று ஆற்று நீர் பதினெட்டு படிகள் தொட்டோடும் என்பது ஐதீகம். அந்த நாளிலும், ஆடி அமாவாசை தினங்களில் கன்னிமார் மற்றும் முன்னோருக்கு திதி, தர்ப்பணம் செய்வதும் இங்கு காலங்காலமாக நடைபெறுவது வழக்கம். இதற்காக கோவை, திருப்பூர், ஈரோடு, போன்ற வெளிமாவட்டம், அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வருவது வழக்கம்.

பெரியவர்களுக்கு திதி கொடுத்தல் போன்ற பல்வேறு பரிஹார பூஜைகள் படித்துறை ஓரம் உள்ள இடத்தில் நடந்து வந்தது. அதில் புரோகிதர்கள் பலர் சிறு குடில்கள் அமைத்து, இந்த சடங்குகளை செய்து வந்தனர். அவர்களுக்கு அதே இடத்தில் புதிதாக தர்ப்பண மண்டபம் கட்டித்தர புரோகிதர்கள் மற்றும் திதி கொடுக்க வரும் பொதுமக்கள் கோரிக்கைகள் வைத்து வந்தனர்.

அம்மாவின் அரசு தர்ப்பண மண்டபம் அமைக்க இந்து சமய அறநிலையத் துறையில் சார்பில் ரூ.3.44 கோடியும், பேரூராட்சிகள் துறையின் சார்பில் ரூ 1.45 கோடி, பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.97 லட்சமும், சுற்றுலாத்துறை சார்பில் ரூ.5 லட்சம் மொத்தம் ரூ.5.91 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், பல்நோக்கு வசதிகளுடன் தர்ப்பண மண்டபம் அமைக்கும் வகையில், நல்லறம் அறக்கட்டளை சார்பில் ரூ.5.11 கோடி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில், பேரூர் படித்துறையில் ரூ.11.02 கோடி மதிப்பீட்டில் தர்ப்பண மண்டபம், மற்றும் அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை செய்து பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணியில் தர்ப்பண மண்டபம், குளியலறை மற்றும் கழிவறை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, முடி காணிக்கை செலுத்தும் மண்டபம், சூரிய மின்சக்தி மின்சாரம் எடுத்தல் மற்றும் விளக்குகள் அமைத்தல், வடிகால் சுத்திகரிப்பு, ஆற்று வெள்ள தடுப்புச்சுவர் மன்றம் ஆற்றுப் படித்துறை அமைத்தல், உயர் மட்ட கோபுர விளக்கு, ஓய்வு மண்டபம், பொருட்கள் பாதுகாப்பு அறை, கல்தளம் அமைத்தா, மதில்சுவர் அமைத்தல், உள்ளிட்ட 33 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இப்படித்துறையில் தர்ப்பண மண்டபம் அமைப்பதால் ஆடி அமாவாசை தினங்களில் கன்னிமார் மற்றும் முன்னோருக்கு திதி, தர்ப்பணம் செய்வது, தோஷ பரிகாரம் நிவர்த்தி செய்ய வரும் பக்தர்கள், புரோகிதர்களுக்கு பெரும் பயன் உள்ளதாக அமையும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

பின்னர் கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேரூர் படித்துறையில் புதிய சிவனடி முன்னோர் வழிபாடு மண்டபம் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் குறித்து கோவை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி அன்பரசன் கூறியதாவது:-

முன்னோரை வழிபடுவது இந்து தர்மத்தின் மிகப்பெரிய கடமையாக கருதப்படுகிறது. பல வழிபாட்டு முறைகளை கொண்டு மீட்டருக்கு கடமைகளை பேரூர் நொய்யல் நதிக் கரைப் படித்துறையில் ஆண்டாண்டு காலமாக மக்கள் செய்து வருகிறார்கள் மக்கள் தொகை அதிகமானதாலும் முறையான பராமரிப்பு அடிப்படை வசதிகள் இல்லாததாலும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றார்கள்.

குப்பைகளை ஆங்காங்கே போடுவது, சுத்தமில்லாத நீர், குளிக்க வசதி இல்லாதது, சுகாதாரம் இல்லாமல் இருப்பது, தர்பணம், சிரார்த்தம் செய்ய போதுமான மண்டப வசதிகள் இல்லாமல் இருப்பது வாகன பார்க்கிங் வசதி இல்லாதது, மழைக்கால சகதி, கூட்டம் அதிகமாகும் சிரமங்கள் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த பிரச்சனைகளால் மக்களுக்கு சிரமம் ஏற்படுவதோடு முன்னோர் வழிபாடு மேற்கொள்ள பலரும் வெகுதூரம் சென்று சடங்குகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து கோவை நல்லறம் அறக்கட்டளை கோவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து புதியதாக சிவனடி முன்னோர் வழிபாடு மண்டப கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது. புதிய கட்டிடத்தில் கிரானைட் தரை, வாகன பார்க்கிங் வசதி, தர்ப்பணம் வந்தவர்கள் காத்திருப்பு மண்டபம், போலீஸ் பூத், சுத்தமான கழிப்பறைகள், குளிக்க தனியிடம், மொட்டை போட தனி இடம், எப்போதும் படித்துறையில் தண்ணீர் இருக்கும் வகையில் நடவடிக்கை, பூஜை பொருட்கள் விற்பனை நிலையம் போன்ற பல வசதிகள் செய்து தரப்படும் இந்தத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் மக்கள் தங்கள் பங்களிப்பை நல்லறம் அறக்கட்டளைக்கு அனுப்பலாம் இதற்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.