சிறப்பு செய்திகள்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்று சிகிச்சைக்கான கட்டணத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நிர்ணயித்துள்ளார் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

அம்மாவின் அரசு கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 03.06.2020 அன்று இவ்வரசு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா நோய் தொற்றிற்கு கட்டணமில்லாமல் சிகிச்சைகள் அளிப்பது குறித்து ஒர் ஆணை வெளியிடப்பட்டது.

கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளை அணுகும் நோயாளிகள், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகின்றனர். இது தொடர்பான செய்திகள் பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனைத் தவிர, இந்திய மருத்துவச் சங்கம் தமிழ்நாடு கிளை நிர்வாகிகள் கொரோனா நோய் தொற்று கண்ட நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் தொடர்பாக சில கோரிக்கைகளை அரசின் முன் வைத்தனர்.

இதனைத் தொடார்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளிடமிருந்து பெற அனுமதிக்கப்படவேண்டிய தினசரி கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து தனது அறிக்கையினை அரசிடம் அளித்தது. இவ்வறிக்கையை கவனமுடன் ஆய்வு செய்த தமிழ்நாடு அரசு, மக்கள் நலன் கருதி கீழ்காணும் கட்டணங்களை நிர்ணயிக்கவும் சில நிபந்தனைகளை விதிக்கவும் உத்தேசித்து அவ்வாறே ஆணையிடுகிறது.