இனிவரும் அனைத்து தேர்தலிலும் கழகம் நிச்சயமாக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திட்டவட்டம்

மதுரை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி இனிவரும் அனைத்து தேர்தலிலும் கழகம் நிச்சயமாக வெற்றிபெறும் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மேலூர் ஆகிய மூன்று தொகுதிகளில் கழக அமைப்பு தேர்தல் நடைபெற்றது.
அப்போது திருப்பரங்குன்றத்தில் கிளை, வட்ட கழக பதவிகளுக்கு மனுக்களை கழக நிர்வாகிகள் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசனிடம் தாக்கல் செய்தனர்.
இந்த நிகழ்வின் போது மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் வாரியத்தலைவர் மருதராஜ், கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமா டாக்டர் வி.பி.பி.பரமசிவம், சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்
இதன்பின்னர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-
இன்றைக்கு ஜனநாயக முறைப்படி கழக ஒருங்கிணைப்பாளர்களை நாங்கள் தேர்வு செய்தோம். கழகத்திடம் இருந்து ஜனநாயகத்தை தி.மு.க கற்றுக்கொள்ள வேண்டும். கழகம் வலுவாக இல்லை என்று சில கட்சிகள் விஷம பிரச்சாரம் செய்கிறார்கள். இன்றைக்கு நடைபெறும் உட்கட்சி தேர்தலில் கழக நிர்வாகிகள் எழுச்சியோடு வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் கழகம் என்றைக்குமே வலுவோடு தான் இருக்கும்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பூனையை யானையாக மாற்றி காட்டுவேன் என்று பொய் வாக்குறுதிகளை ஸ்டாலின் அள்ளி வீசினார். அதே பொய்யை மீண்டும் சட்டமன்ற தேர்தலில் சொன்னார். 505 தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று என்று இன்றைக்கு மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதேபோல் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய தி.மு.க. மவுனம் சாதித்து வருகிறது.
அம்மா ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு நிதி அப்போதே ஒதுக்கப்பட்டது. அந்த பணிகள் தான் இப்போது நடைபெற்று வருகிறது. அந்த திட்ட பணிகளை தான் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். புதியதாக எந்த திட்டமும் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டோம். இதில் ஒன்றரை லட்சம் வாக்கு பெற்று இருந்தால் கழகம் ஆட்சி பொறுப்பை ஏற்றிருக்கும். ஆகவே வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி இனிவரும் அனைத்து தேர்தலிலும் கழகம் நிச்சயமாக வெற்றிபெறும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.
மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா
அதைத்தொடர்ந்து மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசுகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தில் உள்ள மேலூர் திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.
மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டோம். ஆகவே இனி வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகம் வெற்றியை பெற வேண்டும் அடுத்து வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலிலும் நாம் வெற்றியை பெற வேண்டும் அதற்காக நம் இயக்கத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் நமது பணிகள் இருக்க வேண்டும் என்றார்.