தற்போதைய செய்திகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5.50 கோடி கொரோனா சிறப்பு சுழல் நிதி கடன் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்

மதுரை

மதுரை மாவட்டம், தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மதுரை வெள்ளிவீதியார் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ரூ.5.50 கோடி கொரோனா சிறப்பு கடன் நிதி உதவிகளை நேற்று வழங்கினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:-

18 வயது நிரம்பியவர்கள் முதல் 60 வயது வரை உள்ள 12 முதல் 20 பெண்களை குழுவாக இணைப்பது தான் மகளிர்குழு ஆகும். இக்குழுக்களின் செயல்பாடுகள் அனைத்தும் உறுப்பினராக உள்ள பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 1991-ல் இந்த குழுவினை உருவாக்கியவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான்.

மனித சமுதாயம் இருக்கும் வரை பெண்குலத்திற்கு அம்மா அவர்கள் வகுத்த சீரிய திட்டத்திற்கு இணையாக எந்த ஒரு தலைவரும் செய்தது இல்லை. மாவட்டங்கள் தோறும் இக்குழுக்களை அமைத்து அவர்கள் தயாரித்த பொருட்களை தாமே வாங்கி விற்பனையை துவக்கி வைத்தார். தமிழகத்தில் 6.9 லட்சம் மகளிர் குழுக்கள் செயல்படுகின்றன. 103.32 லட்சம் உறுப்பினர் இக்குழுவில் இணைந்திருக்கின்றனர்.

பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தி, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பாரதிதாசன், பாரதியார் ஆகியோரது கனவுகளை நிஜமாக்கியவர் அம்மா அவர்கள் தான். தொட்டில் குழந்தை திட்டம், மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், இல்லத்தரசிகளின் பணிச்சுமைகளை குறைக்கின்ற வகையில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை அம்மா அவர்கள் செயல்படுத்தினார்.

மகளிர் காவல்நிலையம், பெண் கமாண்டோ படை உட்பட பெண்களின் முன்னேற்றத்திற்காக பல பணிகளை முன்னெடுத்து செயல்படுத்தினார். உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடு பெண்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கி அரசாணை பிறப்பித்து நடைமுறைப்படுத்தினார் அம்மா அவர்கள்.

ஊரகப்பகுதிகளில் 4.67 லட்சம் குழுக்கள் செயல்படுகிறது. இக்குழுக்களில் 69.28 லட்சம் பெண்கள் உறுப்பினர்களாக இணைந்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதுடன், தங்களது குடும்ப தேவைகளையும் பூர்த்தி செய்து பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றனர். நகர்ப்புற பகுதிகளில் செயல்படும் 2.29 லட்சம் குழுக்களில் 34.34 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ரூ.65,930 கோடி மகளிர் குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது. இக்குழுக்களின் சேமிப்பு ரூ.8921 கோடி ஆகும்.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை 35850 உறுப்பினர்களை கொண்ட 2990 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்படுகின்றன. 2020-21ம் நிதியாண்டில் 1000 மகளிர் சுயஉதவிக் குழுக்களும், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள் அடங்கிய 300 சிறப்புக் குழுக்களையும் உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.279.64 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கூட்டுறவுத்துறை மூலமாக 2011-12 முதல் 31.03.2020 வரை 3.83,063 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6613.29 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 சிறப்பு கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. 49 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் ரூ.2.90 கோடி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

இவ்வாற அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

பின்னர் மதுரை கீரைத்துறையில் தங்க நகை செய்யும் 500 தொழிலாளர் குடும்பங்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மதுரை மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் எம்.எஸ்.பாண்டியன், பாண்டியன் கூட்டுறவு இணையத்தின் தலைவர் ஜெ.ராஜா, கூடுதல் இயக்குநர், திட்ட அலுவலர் (தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்) பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.