கோவை

வரும் தேர்தலில் கழகத்திற்கு மாபெரும் வெற்றியை அர்ப்பணிப்போம் – சிங்கை ஜி.ராமச்சந்திரன் சூளுரை

கோவை

தி.மு.க.வின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து வரும் தேர்தலில் கழகத்திற்கு மாபெரும் வெற்றியை அர்ப்பணிப்போம் என்று சிங்கை ஜி.ராமச்சந்திரன் சூளுரைத்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்கவும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தலின்படியும் கோவை இதய தெய்வம் மாளிகையில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் கோவை மண்டல செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் தலைமையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களை காக்க அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறார்கள். இதனால் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் கழக அரசின் மீது அவதூறு பரப்பி வரும் ஸ்டாலினுக்கு தகவல் தொழில்நுட்பப் பிரிவு தகுந்த பதிலடியை கொடுக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப பிரிவு மிக மிக அவசியம் என்று தொலைநோக்கு சிந்தனையோடு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழகத்தை சேர்ந்த இளைஞர்களை கொண்டு தகவல் தொழில்நுட்ப பிரிவை ஆரம்பித்தார்.

முதலமைச்சர் , துணை முதல்வர் ஆகியோர் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் கட்சியின் மூளையாக செயல்பட வேண்டும் என்றும் கழகத்திற்கு வலுசேர்க்கும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்கள். அதன்படி தகவல் தொழில்நுட்ப பிரிவினர் கழகத்திற்கு பக்கபலமாக பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள்.

இதுவரை நாம் சிறப்பாக பல பணிகளை மேற்கொண்டிருந்தாலும் கூட இனி வரும் நாட்கள் ஒவ்வொன்றும் நமக்கு மிக மிக முக்கியம். அடுத்த கட்ட நகர்வு மிகவும் முக்கியமானதாக உள்ளது. நாம் முழுமையாக பணியாற்ற வேண்டும். படித்த இளைஞர்களை கழகத்திற்கு அழைத்து வரவேண்டும். கழகத்திற்கு வலுசேர்க்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் 24 மணிநேரமும் செயல்பட வேண்டும்.

தமிழக மக்களின் நலன் காக்க கழக அரசு செயல்படுத்தி வரும் சரித்திர சாதனை திட்டங்களை தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்க்க வேண்டும். வரும் தேர்தலில் திமுகவின் பொய் பிரசாரங்களை முறியடித்து கழகத்திற்கு மாபெரும் வெற்றியை அர்ப்பணிக்க வேண்டும்.

இவ்வாறு சிங்கை ஜி.ராமச்சந்திரன் பேசினார்.

இக்கூட்டத்தில் கோவை மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர்கள் என்.கே.எம்.கணேஷ், பாலச்சந்தர், டாக்டர் மகேஸ் ராஜா, புடியங்கி ரஜினி, டாக்டர் ஆதித்யா, சுரேஷ், ஏ.எஸ்.பாலச்சந்தர், சாமிநாதன், பெருமாள், ஸ்ரீதரன், நிர்வாகிகள் கார்த்திக், மகாராஜன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.