கோவை

ரூ.75 கோடியில் அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி – பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆய்வு

கோவை

ரூபாய் 75 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆய்வு மேற்கொண்டார்.

சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் சட்டமன்றத்தில் வலியுறுத்தியதின் பயனாக அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் விடுபட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு தினமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் புதிய திட்டத்திற்கு ரூ.75 கோடி நிதியை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஒதுக்கினார்.

அதைத்தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் இரும்பு குழாய் பதிக்கும் பணிகள், மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், பொன்னாயூர் ஊராட்சியை அடுத்த நல்லூத்துக்குளி பிரிவு மற்றும் போடிபாளையம் குளத்தூர் பிரிவு ஆகிய பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் ஆய்வு செய்தார். மேலும் இந்த பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

பின்னர் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறுகையில், கோவையில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அம்பரம்பாளையம் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை அறிவித்தார். இதையடுத்து இரும்பு குழாய், மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

மேலும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த சிமென்ட் குழாய்க்கு பதில் இரும்பு குழாய் பதிக்கப்படுவதால் உடைப்பு ஏற்படுவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. குடிநீர் சேதாரமும் பெருமளவு குறைகிறது. இத்திட்டம் மூலம் கிணத்துக்கடவு ஒன்றியத்தின் கடைக்கோடி கிராமங்களான காவிலிபாளையம், வடசித்தூர், மெட்டுவாவி, காரசேரி, அரசம்பாளையம், பனப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கும். இப்பணிகள் இன்னும் மூன்று மாதத்தில் நிறைவடையும். இதையடுத்து அனைத்து கிராமங்களுக்கும் தினசரி பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் என்றார்.

இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், வட்டாட்சியர் தணிகைவேல், ஒன்றிய கழக செயலாளர் ஆர்.ஏ.சக்திவேல், கழக நிர்வாகிகள் வீராசாமி, பிவிஜெ.அக்னீஸ் முகுந்தன், குடிநீர் வழங்கல் துறை செயற்பொறியாளர் செல்வராஜ், முன்னாள் கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் சண்முகசுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஜி.ஜெகதீஷ்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெயசீலா, தென்னரசு, கண்ணன், ராதாகிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, புவனேஸ்குமார், கோரை.செல்வன், சங்கரப்பன், ஜெயபால், முருகன், மணிவண்ணன், சதீஸ் மற்றும் பலர் உள்ளனர்.