தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு வழங்க சமூகநலத்துறை சார்பில் 45 லட்சம் முக கவசங்கள் தயார் – அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா தகவல்

நாமக்கல்

சமூகநலத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்க 45 லட்சம் முகக்கவசம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா தெரிவித்துள்ளார்.

கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூக நலத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுவாழ்வும் நிரந்தர உயர்வுக்கும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். ரூ.667 கோடி இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழகத்தில் ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு நாற்காலிகள் வழங்கும் திட்டம் தமிழக அளவில் நாமக்கல்லில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் இந்த சேவை கிடைக்கும். மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் அன்றாட பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக தமிழகம் முழுவதும் 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 518 மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தக் குழந்தைகள் ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் அன்றாட பயிற்சி பெறுவதில் உள்ள சிரமங்களை போக்கி அவர்கள் சரியாகவும் வசதியாகவும் அமர்ந்து கொள்ள முடியும். அதே சமயம் அவர்களின் முதுகுப் பகுதியை நேராகவும் கால்களை சரியான அமர்வு நிலையில் வைத்துக்கொள்ளவும் இந்த சிறப்பு நாற்காலிகள் பயன்படும். இதன்மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 15 பேர் உள்பட தமிழகம் முழுவதும் 518 மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயனடைவார்கள்.

சமூகநலத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்க 45 லட்சம் முகக்கவசம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள 2 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக முககவசங்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 45 லட்சம் முகக் கவசங்கள் தயார் செய்யப்பட்டு அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் அந்தந்த பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. 45 லட்சம் முகக்கவசங்கள் தயாரிப்பதில் 10 மாவட்டங்களுக்கு 100 சதவீத முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வார காலத்திற்குள் அனைத்து மாவட்டத்திற்கும் தேவையான கவசங்கள் வழங்கப்பட்டு விடும்.

சமூக நலத்துறையின் தையல் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிற்சி பெற்ற தையல் தொழிலாளிகள் கொண்டு முகக்கவசங்கள் தயார் செய்து வருகின்றனர். மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் துவைத்து பயன்படுத்தும் வகையிலான முகக்கவசம் மக்கள் நல்வாழ்வு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கப்படும். காது கேளாத பேச தெரியாத மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஒரு லட்சம் பேருக்கு மேல் கவசங்கள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா தெரிவித்தார்.