தற்போதைய செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் 529 ஏரி, குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளது – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 529 ஏரி, குட்டைகள் ரூ.41 கோடியே 7 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் தூர்வாரப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் தூள்செட்டி ஏரி, இராஜபாளையம் புதிய ஏரி மற்றும் பிக்கனஅள்ளி ஏரியில் தூர்வாருதல், பழுதுநீக்குதல் மற்றும் புனரமைப்பு பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள், குட்டைகளில் நீர் ஆதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் குடிமராமத்து திட்டத்தை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு ஏரிகள் தூர்வாரப்பட்டு, வரத்து கால்வாய்கள் சீர் செய்யப்பட்டு அதன் மூலம் மழைநீரை சேமித்து பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 71 ஏரிகள் தற்போது இத்திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு உள்ளது. 2020 – 21 ஆம் ஆண்டில் 14 ஏரிகளை தூர்வார 8 கோடியே 11 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. தற்போது இப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாலக்கோடு வட்டம் ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் தூளிச்செட்டி ஏரி, இராஜபாளையம் புதிய ஏரி மற்றும் பிக்கனஅள்ளி ஏரியில் பிரதம மந்திரி கிரிஷி சினாச்சி யோஜனா திட்டத்தின் கீழ் தூர்வாருதல், பழுதுநீக்குதல் மற்றும் புனரமைப்பு செய்யும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதம மந்திரி கிரிஷி சினாச்சி யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.8.11 கோடி மதிப்பீட்டில் ஏலகிரி பெரிய ஏரி, கூனம்பள்ளம் ஏரி, கோட்டம்பள்ளம் ஏரி, மத்தாளப்பள்ளம் ஏரி, மூலபெல்லூர் பள்ளம் ஏரி, தூளிச்செட்டி ஏரி, மகேந்திரமங்கலம் ஏரி, இராஜபாளையம் புதிய ஏரி, அமானிதலாவ் ஏரி, பிக்கனஅள்ளி ஏரி, சிந்தல்பாடி ஏரி, வெதரம்பட்டி ஏரி, போளையம்பள்ளி ஏரி ஆகிய 14 ஏரிகள் தூர்வாருதல், பழுதுநீக்குதல் மற்றும் புனரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டுகளில் 458 ஏரிகள் குட்டைகள் 16 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பில் தூர்வாரப்பட்டு உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 529 ஏரிகள், குட்டைகள் 41 கோடியே 7 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் தூர்வாரப்பட்டு உள்ளது. தமிழக அரசு அனைத்து பகுதியில் உள்ள மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.அரங்கநாாதன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் தொ.மு.நாகராஜன், பாலக்கோடு ஒன்றியக்குழு தலைவர் பாஞ்சாலை கோபால், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கௌரி, தண்டபாணி, மீனா, கூட்டுறவு உதவி பொறியாளர்கள் சாமராஜ், முருகன், பாலக்கோடு வட்டாட்சியர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.