தற்போதைய செய்திகள்

வேளாண் விரிவாக்க மைய கட்டட பணி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

மதுரை

மதுரை மாவட்டம், செக்கானூரணி ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் விரிவாக்க மைய கட்டட பணியை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில் வருவாய் பேரிடர் மோண்மை மற்றும் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்ததாவது:-

முதலமைச்சரின் அறிவுரையை மதுரை மாவட்ட மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கொரோனா என்பது கண்ணுக்கு தெரியாத கிருமி என்பதால் பொது இடங்களுக்கு வரும்பொழுது மக்கள் முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது மற்றும் சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்புடனும், பங்களிப்புடனும் செயல்பட்டதால் தான் நமது திருமங்கலம் ஒன்றியம் கொரோனா வைரஸ் தொற்றில்லாத ஒன்றியமாகத் திகழ்கிறது. முதலமைச்சர் மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று குறித்து முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறுகிற அனைத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் முகக்கவசம் வழங்குதல், கபசுரக்குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

முதலமைச்சரின் அறிவுரையின்படி சிறப்பு நிகழ்வாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஜிங் மாத்திரைகள், மல்டி வைட்டமின் மாத்திரைகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாத்திரைகளை தொடர்ந்து 10 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஊரடங்கு காலத்திலும் வேளாண் பணிகள், விவசாய பணிகள் தடைபடக் கூடாது என்பதற்காக முதலமைச்சர் வேளாண் பணிகளுக்கு விலக்களித்து உத்தரவிட்டார். இந்திய தேசத்தின் பொருளாதாரத்தை மீட்டெக்கும் ஐந்து முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதற்கு காரணம் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பும் ஆகும்.

கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை ஆனால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். விழிப்புணர்வின்மையால் நோய் தொற்று ஏற்பட்டோரை குணமடையச் செய்ய மருத்துவர்கள், செவிலியர்கள் முதலமைச்சரின் உத்தரவின்படி கடுமையாக போராடுகின்றனர். இந்த சவாலான நேரத்திலும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, மற்றும் உள்ளாட்சித்துறையினர் இரவு பகல் பாராது பணியாற்றுகின்றனர். அதோடு நமது வேளாண்மைத்துறை இன்று சத்தமில்லாமல் சாதனை படைத்திருக்கிறது.

இன்று விலைவாசி கட்டுக்குள் உள்ளது. விளைச்சல் அமோகமாக இருக்கிறது. முதலமைச்சர் மத்திய தொகுப்புடன் சேர்த்து மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் 4 நபர்கள் உள்ள குடும்பத்திற்கு 50 கிலோ அரிசி வழங்க உத்தரவிட்டுள்ளார். வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் சார்பில் ஒரு லட்சத்து பத்தாயிரம் குடும்பங்களுக்கு காய்கறித் தொகுப்பு மற்றும் அரிசித் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோதுமை மாவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கூட்டுப்பண்ணையத் திட்டம் 2019-2020 திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் கருவிகள், பல்வகை பயிர் கதிரடிக்கும் இயந்திரம், டிராக்டர்கள் மற்றும் வேளாண் பெருமக்களுக்கு 50 சதவிகித மானியத்தில் வேளாண் இடுபொருட்கள் ரூ.17.5 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.

முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இயங்கி வரும் கொரோனா வைரஸ் அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்த நிகழ்ச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித்தவித்த ஏழை குடும்பங்களுக்கு மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் தன் மகளின் எதிர்காலத்திற்கு சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தை செலவு செய்தார்.

அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திரமோடி அக்குடும்பத்தை பாராட்டினார். அதனைத் தொடர்ந்து வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய் ஆகியோர் 04.06.2020 அன்று பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரரின் குடும்பத்தை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், வேளாண்மை இணை இயக்குநர் விவேகானந்தன், நேர்முக உதவியாளர் தனலெட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் (திருமங்கலம்) சௌந்தர்யா, வேளாண்மை கூடுதல் இயக்குநர் தேவகி, வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் மனோகரன், அருணாச்சலம், விஜயகுமார், வட்டாட்சியர் (திருமங்கலம்) தனலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.