தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு நாற்காலிகள் வழங்கும் திட்டம் – அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா தொடங்கி வைத்தனர்

நாமக்கல்

நாமக்கல்லில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு நாற்காலிகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பி.தங்கமணி, வெ.சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழகத்தில் முதன்முறையாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு நாற்காலிகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இந்த சிறப்பு நாற்காலிகள் மூலம் அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்தும் பார்வையிட்டனர். மேலும், கொரோனா விழிப்புணர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு வாகனங்களையும் அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து விழிப்புணர்வு கையேடுகளை வெளியிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1034 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலிகள், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கி பணிகளை தொடங்கி வைத்தனர். அப்போது கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட தன்னார்வ நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ப.ஜான்சி, நாமக்கல் மாவட்ட கழக அவைத்தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவருமான பி.ஆர்.சுந்தரம் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.