தற்போதைய செய்திகள்

ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தினால் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை

ஈரோடு

தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்தால் அந்த பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க, மாற்றுத்திறனாளின் தேவைகள் அறிந்து எண்ணற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் அனைத்து ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்தால் அந்த பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் இடத்தில் வசிக்கும் மாணவர்களை வேன் மூலமாக அழைத்து வந்து தனி அறையில் தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்படும். பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்து 18பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளில் இருந்து மாணவர்களை நீக்கினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இது குறித்து பெற்றோர் அல்லது மாணவர்கள் புகார் அளிக்கலாம். தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம் ஆகும். மேலும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தலின்படி 10,11,12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.