தற்போதைய செய்திகள்

வண்டல்மண் எடுப்பதன் மூலம் ஆறு, ஏரிகளில் நீர் நிறைந்து நிலத்தடி நீர்மட்டம் உயர்வு – அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம்

கடலூர்

வண்டல் மண் எடுப்பதன் மூலம் மழைக்காலங்களில் ஆறு, ஏரிகளில் அதிகளவு நீர் தேங்கி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

கடலூர் ஊராட்சி ஒன்றியம் ஒன்றியத்திற்குட்பட்ட நல்லாத்தூர் ஊராட்சியில் குளம் தூர்வாரும் பணி மற்றும் தென்னம்பாக்கம் ஏரியில் வண்டல் மண் எடுக்கும் பணி ஆகிய நிகழ்ச்சிகளின் துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வன் தலைமை தாங்கினார்.

கூடுதல் ஆட்சியர் இராஜகோபால் சுங்கரா முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு நல்லாத்தூர் ஊராட்சியில் உள்ள புறா குளத்தில் குளம் தூர்வாரும் பணியையும், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சார்பில் தென்னம்பாக்கம் ஏரியில் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

தமிழகத்திலுள்ள குளங்கள், நீர்நிலைகள், ஏரிகள் ஆகியவற்றில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து பயன்பெறலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி இதுவரை கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, புவனகிரி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில், திட்டக்குடி ஆகிய பகுதியில் உள்ள விருத்தாசலம் வெள்ளாறு வடிநில கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள மொத்த ஏரிகள் 210 ஆகும் இதில் 153 ஏரிகளில் 6 லட்சத்து 89 ஆயிரத்து 611 கன மீட்டர் வண்டல் மண் வெளியேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 3700 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

ஏரிகள் கால்வாய்கள் மற்றும் அணைகள் அமைந்துள்ள கிராமத்திலோ அதன் அருகில் உள்ள கிராமங்களிலோ உள்ள பயனாளிகள் மாவட்ட ஆட்சியரால் அரசிதழில் வெளியிடப்பட்ட பின் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் இலவசமாக வண்டல் மண் எடுத்துச் செல்ல விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் ஏரிகள் கால்வாய்கள் மற்றும் அணைகளில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மற்றும் களிமண்ணின் அளவு விவசாயிகளுக்கு விவசாய பயன்பாட்டிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நன்செய் நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டர் மிகாமலும் புன்செய் நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 90 மீட்டர் மிகாமலும் இலவசமாக எடுத்துச் செல்லலாம். பொதுமக்களில் நபருக்கு 30 கனமீட்டர் மிகாமலும், மண்பாண்ட தொழிலாளர்கள் கூடுதலாக என்பது கனமீட்டர் மிகாமலும் வண்டல்மண் இலவசமாக எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சிகளில் உள்ள 884 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 13,658 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இதுவரை 1.72.93,332 கனமீட்டர் வண்டல்மண் எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் வண்டல் மண் எடுப்பதன் மூலம் மழைக்காலங்களில் ஆறு ஏரிகளில் அதிகளவு நீர் தேங்கி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் அதிக அளவு பயன் பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.