தற்போதைய செய்திகள்

முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்த பெண்கள் – குறை கேட்டறிந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் தெரிவித்தனர்

விருதுநகர்

தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி சிவகாசி தொகுதியில் நிலவி வந்த குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறை கேட்டறிந்த பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் கிராம பெண்கள் கூறினர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோரின் முயற்சியால் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை ஒன்றியங்களுக்குட்பட்ட 755 ஊரக குடியிருப்புகளுக்கு தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு சீவலப்பேரியை தலைமையிடமாக வைத்து கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.234 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவுபெற்று கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குடிநீர் விநியோக பணிகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த மார்ச் 1ம்தேதி தொடங்கி வைத்தார். மேலும் விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் நகராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.450 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு குடிநீர் திட்டப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அதேபோன்று திருத்தங்கல், சிவகாசி மற்றும் ராஜபாளையம் ஆகிய நகராட்சிப் பகுதி மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்கும் வகையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கொண்டாநகரம் அருகே தாமிரபரணி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு ரூ.404.04 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளும் நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் பிரச்சனைக்கு கழக அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இந்நிலையில் சிவகாசி தொகுதியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கிராமம் கிராமமாக சென்று கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். சிவகாசி அருகே ஈஞ்சார் நடுவப்பட்டியில் கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது கிராம பெண்கள் கூறுகையில், எங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் பிரச்சனை இருந்தது. தற்போது தான் தாமிரபரணி தண்ணீர் எங்களுக்கு கிடைக்கிறது. இப்போது நாங்கள் குடிநீரை விலைக்கு வாங்குவது கிடையாது. 30 ஆண்டுகால குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திய புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், உங்களுக்கும் (அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கும்) நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கையெடுத்து வணங்கினர்.

அதற்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உங்களுக்காக நாங்கள் எப்போதும் உழைத்துக் கொண்டு தான் இருப்போம் என்றும் கழக ஆட்சி ஏழைகளின் ஆட்சி என்றும் பெண்களிடம் தெரிவித்தார்.