திருவண்ணாமலை

நாடக கலைஞர்கள் 5000 பேருக்கு நிதியுதவி பெற்றுத்தர நடவடிக்கை – முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி உறுதி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாடக கலைஞர்கள் 5 ஆயிரம் பேருக்கு நிதியுதவி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உறுதி அளித்துள்ளார்.

திருவண்ணாமலையை அடுத்த காஞ்சி கிராமத்தில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மாநில நலச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட நாடக ஆசிரியர் ராமசாமி தலைமை வகித்தார். சங்க செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

முன்னாள் அமைச்சரும், மாவட்ட ஆவின் தலைவரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கிராமிய கலைஞர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி உதவிகளை வழங்கி பேசியதாவது:-

மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நாடக கலையில் இருந்து தான் திரையுலகிற்கு வந்தார். அதன் பின்னர் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் ஆனார். அப்போது நாடக கலைஞர்களின் நிலை என்ன என்பது புரிந்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், நிதி உதவிகளையும் வழங்கினார். பின்னர் அவரை தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நாடக கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் கலைமாமணி விருது மற்றும் நிதி உதவி நலிந்த நாடக மற்றும் திரை உலக நடிகர்களுக்கு நிதி உதவி அளித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது 500 நாடக கலைஞர்களுக்கு மாதா மாதம் இரண்டாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதனை 5 ஆயிரம் பேருக்கு பெற்றுத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இக்கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றி தரப்படும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரவிந்தன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நைனா கண்ணு, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர் பருவதம், கூட்டுறவு சங்கத் தலைவர் பழனிராஜ் மற்றும் 8 மாவட்டங்களை சேர்ந்த நாடக கலைஞர்கள் கலந்து கொண்டனர்.