தற்போதைய செய்திகள்

மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு அமைச்சர் கே.பாண்டியராஜன் நியமனம் – தமிழக அரசு உத்தரவு

சென்னை

சென்னையில் கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேலாண்மை, கொரோனா பரிசோதனை, தொற்றுள்ளவர்களை தேடி தடமறியும் பணி, தொற்றுள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்கான மேலாண்மை ஆகியவற்றை திறனுடன் செயல்படுத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளைக் கொண்ட களப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மற்றும் மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ள களப் பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட வார்டுகள் வாரியாக அமைச்சர்களை நியமித்து அரசு ஏற்கனவே உத்தரவிட்டது. அந்த வகையில், 3,4 மற்றும் 5-ம் மண்டலங்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், 13, 14, 15-ம் மண்டலங்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், 8, 9, 10-ம் மண்டலங்களுக்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், 1, 2, 6-ம் மண்டலங்களுக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 7, 11, 12-ம் மண்டலங்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அரசாணை ஒன்றை வெளியிட்டார். அதில், கடந்த அரசாணையில் ஒரு மாற்றம் செய்துள்ளார். 4-வது வார்டில் ஒருங்கிணைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் நியமிக்கப்படுகிறார் என்று தெரிவித்தார்.