சிறப்பு செய்திகள்

ரூ.40 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை கட்டடம், பாலங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

ரூ.40 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை கட்டடங்கள் மற்றும் பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், 6 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், வேலூர், காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 34 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டடங்கள் மற்றும் பாலங்களை திறந்து வைத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

மாவட்ட அளவில் கிராமங்களுக்குத் தேவையான அனைத்து வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தும் அலகாகவும், ஒன்றிய அளவிலான அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல், ஆய்வுக்கூட்டம் நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்கள் தங்கள் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாகவும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையை அணுக வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்கள் போதிய இடவசதி இல்லாமல் சிறிய கட்டடங்களில் இயங்கி வருகின்றன.

அதனை கருத்தில் கொண்டு, 2017-18ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையில், ஊரக வளர்ச்சித்துறையின் கீழுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் பல்வேறு அலுவலகங்களை மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து, வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 28,716 சதுரஅடி கட்டட பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன் 6 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், துத்திகாடு – நஞ்சுகொண்டபுரம் சாலையில், நாகநதி ஆற்றின் குறுக்கே 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், தனகொண்டபல்லி – மேல்கொல்லப்பல்லி சாலையில், கொட்டாற்றின் குறுக்கே 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்,

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 6 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடம் மற்றும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், கெருகம்பாக்கம் ஊராட்சியில் அடையாறு ஆற்றின் குறுக்கே 5 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம்,

அரியலூர் மாவட்டம், தாதம்பேட்டை பழூர் ஊராட்சி ஒன்றியத்தில், சுத்தமல்லி – வடகடல் சாலையில், 1 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தில், குடமுருட்டி ஆற்றின் குறுக்கே 1 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் நடுப்படுகை சாலையில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே 1 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், குடவாசல் ஊராட்சி ஒன்றியத்தில், மொட்டையாற்றின் குறுக்கே 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்,

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விடுதிக் கட்டடங்கள், 1 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள் உற்பத்தி, பதனிடுதல் மற்றும் செயலாக்க மையக் கட்டடம், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் மையக் கட்டடம்,

1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது சமையலறை மற்றும் உணவு வழங்கும் சேவைப் பிரிவுக் கட்டடம் என மொத்தம் 40 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டடங்கள் மற்றும் பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். மேலும், திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக பயன்பாட்டிற்காக 2 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக்கட்டடத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர்கபீல், தலைமைச் செயலாளர் க.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.