தமிழகம்

முதலமைச்சர் குறிப்பிட்டது போல் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை ஒழித்து விடலாம் – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

முதலமைச்சர் குறிப்பிட்டது போல மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை ஒழித்து விடலாம் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னையில் கொரோனா தடுப்புப்பணி குறித்து அமைச்சர்கள் டி.ஜெயக்குமார்,எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், ஆர்.காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரசுத் துறை செயலர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழக முதல்வர் நேரடியாக சென்னை மாநகராட்சிக்கு வந்து ஆலோசனை கூட்டத்தில் பங்கு கொண்டு பல்வேறு கருத்துக்களை, அறிவுரைகளை வழங்கியுள்ளார். சென்னையில் 15 மண்டலங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து,பல்வேறு பணிகளை முதலமைச்சர் முடுக்கிவிட்டுள்ளார். அதன் தொடர்சியாக ,அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஏற்கனவே வழங்கிய அறிவுரைகளை எல்லாம் உயர்மட்ட அதிகாரிகள், அடித்தட்டு வரை கொண்டு போய் சேர்த்து, கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஒழிக்க வேண்டும் என்ற அளவில் ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு அனைத்து அதிகாரிகளும் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

சென்னையில் 39 ஆயிரத்தி 600க்கு மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில் 6 ஆயிரம் தெருக்களில் அதாவது 84 சதவீதத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. மீதியுள்ள 16 சதவீதம் அளவில் கொரோனா தாக்கம் இருப்பதின் காரணமாக இதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுரையை ஏற்று, இன்றைக்கு மண்டல வாரியாக அமைச்சர்கள் பணியை மேற்கொள்ள உள்ளார்கள்.

இனிமேல் வார்டு வாரியாக, தெருவாரியாக, முழுமையான அளவுக்கு ஏற்கனவே கண்காணிக்கப்பட்டது போல அமைச்சர்கள் ஆலோசனை செய்து களப்பணியாற்றுவார்கள். சென்னை மாநகராட்சி ஊழியர்களை தவிர அயல் பணியிலிருந்து கிட்டத்தட்ட 11 ஆயிரம் பேர் வீடு, வீடாக சென்று புள்ளி விபரங்களை சேகரித்துள்ளார்கள். யார் யாருக்கு என்ன தேவை,நோயின் தாக்கம் உள்ளிட்ட பல தகவல்களை சேகரித்துள்ளார்கள்.

இவை அனைத்தையும் வைத்துக்கொண்டு முழுமையான அளவிற்கு களப்பணியாற்றுவதற்கு நல்ல சூழ்நிலையாக இருக்கும். அரசு முழுமையாக நடவடிக்கை எடுத்துகொண்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் குறிப்பிட்டது போல இந்த கொரோனா போரில் நாம் வெற்றிகொள்வோம்.

இதில் பொதுமக்கள் ஒத்துழைப்பு என்பது மிக மிக முக்கியம். முதலமைச்சர் குறிப்பிட்டது போல முக கவசம் என்பது அத்தியாவசியமானது. அதுபோல கைகளை கழுவுதல், சுத்தமாக இருப்பது, சமூக இடைவெளி இவை அனைத்தையும், கடைபிடித்தல் நிச்சயமாக கொரோனா தாக்குதலில் இருந்து தப்பித்து விடலாம். அந்த விழிப்புணர்வு ஏற்கனவே மாநகராட்சி மூலம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல அரசு மூலமாக செய்யப்பட்டு வருகிறது. தற்போது களப்பணியில் நாங்கள் இதனையும் செய்வோம்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.