தற்போதைய செய்திகள்

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 14 தொலைக்காட்சிகளில் பாடம் நடத்த ஏற்பாடு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஈரோடு

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 14 தொலைக்காட்சிகளில் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி வெள்ளாளபாளையம் ஊராட்சியில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரூ.15.47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கான பணிகளையும், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்க கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் பயனாளிகளுக்கு ரூ.60 லட்சம் கடனுதவிகளை வழங்கிய பின்னா் அப்பகுதியில் அமைந்துள்ள அரசு உயா்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கியும், சத்துணவு உண்ணும் மாணவ மாணவிகளுக்கு மே மாதத்திற்கான அரிசி பருப்புகளை வழங்கியும் பெருந்தலைவர் காமராஜரின் 118-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அவரது படத்திற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாலை அணிவித்தார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

பள்ளி மாணவர்களுக்கு 14 தொலைக்காட்சிகளில் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைக்காட்சி வழியாக பாடம் நடத்தும் பணிகள் இன்னும் மூன்று நாட்களில் தொடங்கப்படும். 6019 பள்ளிகளில் இணையதள வசதி செய்யப்பட்டுள்ளதால்
பள்ளிகள் திறக்கப்படவில்லை என்றாலும் க்யூ.ஆர்.கோடு மூலம் கல்வி கற்க முடியும். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் தான் தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்கள்.

சிபிஎஸ்சி யில் பாடதிட்டத்தை குறைப்பது குறித்து பல்வேறு கருத்துகள் வருவதால் கருத்து கூற விரும்பவில்லை. மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வார காலத்தில் அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக புத்தகங்கள் வழங்கப்படும்

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி.தங்கதுரை, கோபி ஒன்றிய கழக செயலாளர் சிறுவலூர் மனோகரன், ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், வழக்கறிஞர் வி.ஆர்.வேலுமணி, ஊராட்சி தலைவர் சத்தியபாமா வேலுமணி, துணைத் தலைவர் செல்வி, ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, திலகவதி, ஜெயம்மூர்த்தி, சங்க தலைவர் சதாசிவம், வெங்கடாசலம், தங்கவேலு, உள்பட பலர் கலந்து கொண்டனர்