தமிழகம் தற்போதைய செய்திகள்

திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ரூ.71.5 கோடியில் 15 சேமிப்புக்கிடங்குகள் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 8.6.2020 அன்று தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 71 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 சேமிப்புக்கிடங்குகள் மற்றும் மதுரையில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

உணவு பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை முறையாக சேமித்து வைக்கும் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக புதிதாக கூடுதல் கிடங்குகள் கட்டப்படும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கோவிலூர் கிராமத்தில் 66 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தலா 5,000 மெட்ரிக் டன் கொள்ளளவுடன், மொத்தம் 60,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 சேமிப்புக்கிடங்குகள், கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், வேப்பூர் கிராமத்தில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தலா 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவுடன், மொத்தம் 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், எழுநூற்றிமங்களம் கிராமத்தில் 1 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 1 சேமிப்புக் கிடங்கு, கூட்டுறவுத் துறை சார்பில் மதுரையில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகக் கட்டடம் என மொத்தம் 74 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 சேமிப்புக்கிடங்குகள் மற்றும் ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 30 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலர் மற்றும் துப்புரவாளர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மு.சுதாதேவி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.