சிறப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி நடக்கிறது என்றும், தி.மு.க. அமைச்சர்களுக்கு வாய் தான் காது வரை இருக்கிறது.

சென்னை மாங்காடு பகுதியில் கழக உட்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை வழங்கிய பிறகு முன்னாள் அமைச்சரும், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி: பொய்வழக்கு போடுவதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளாரே.

பதில்: எதிர்க்கட்சியாக தி.மு.க இருக்கும்போது அப்போது வாய்கிழிய பேசினார்கள். இந்த ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை, இல்லை என்று பேசினார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது. இப்போது முதலமைச்சருக்கு ஒத்தூதினால் அது கருத்து சுதந்திரம். ஆட்சிக்கு எதிராகவும், தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராகவும் ஆரோக்கியமான விமர்சனங்களை வைத்தால் அது கருத்து சுதந்திரம் கிடையாது.

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினிஎமர்ஜென்சி தான் நடந்து வருகிறது. யாரும் பேசக்கூடாது. சபரீசனை பற்றி பேசக்கூடாது. உதயநிதியை பற்றி பேசக்கூடாது. யார் இன்றைக்கு ஆட்சி செய்கிறார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலினா ஆட்சி செய்கிறார். சபரீசன் தான் இன்றைக்கு ஆட்சி செய்கிறார். அதிகாரிகள் மாற்றத்திலிருந்து பல்வேறு மாற்றங்கள் எல்லாம் சபரீசனின் தலையீடு இருப்பதாக பல பத்திரிக்கைகளில் பலரும் இன்றைக்கு பேசி கொண்டிருக்கிறார்கள்.

ஜனநாயகத்தின்படி விமர்சனம் செய்தால், எதிர் விமர்சனம் செய்யுங்கள். இப்போது நான் ஒரு பேட்டி அளித்தால் நீங்களும் ஒரு பேட்டி அளித்து அது தவறு என்று சொல்லுங்கள். இதை விட்டு விட்டு உடனடியாக ஒரு புகாரை பெற்று நடவடிக்கை எடுத்து ஜெயிலில் போடுவது. மாரிதாஸ் கருத்துக்குள் நான் போக விரும்பவில்லை. தேச நலன், தேச பாதுகாப்பு என்பது தான் கழகத்தின் கொள்கை. ஆனால் இந்த ஆட்சிக்கு எதிராக யார் வாயை திறந்தாலும் உடனடியாக குண்டர் சட்டத்தில் போடுவது, பொய்வழக்கு தொடுப்பது எப்படி சரியாக இருக்கும்.

இப்படிப்பட்ட கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அரசு, மினி எமர்ஜென்சி போன்று தான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு அதிகாரி குறித்து ஒரு கட்சி விமர்சனம் செய்கிறது என்றால் அதனை ஆரோக்கியமான முறையில் செய்ய வேண்டும். அவர் சில குற்றச்சாட்டுகளை காவல்துறைத்தலைவர் மீது சொல்கிறார். அதற்காக ஒரு அமைச்சர் வெந்ததை தின்று விட்டு வந்து வாய்க்கு வந்தபடி பேசினால் எப்படி. இது மோசமான விமர்சனம் இல்லையா. யாரை பற்றியும் யாரும் விமர்சனம் செய்யக்கூடாதா?

தி.மு.க. அமைச்சர்களுக்கு வாய் தான் காதுவரை உள்ளது. வேறு ஒன்றும் கிடையாது. திமுக ஆட்சியில் ஒரு புதிய திட்டமும் கிடையாது. அம்மாவின் அரசில் என்ன என்ன திட்டங்களை கொண்டு வந்தார்களோ அதை தான் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு அரசு அலுவலங்களில் டிஎன்பிசியில் 20 சதவீதம் தமிழில் படித்தால் தான் வேலை. இந்த ஆணையை போட்டது நாங்கள். இவர்கள் இந்த ஆணையை போட்டது போல பெரியதாக மீடியாவில் பில்டப் செய்து வருகிறார்கள்.

இதுபோன்று ஏமாற்று வேலை, மோசடியான வேலையை தி.மு.க. அரசு செய்து வருகிறது. அன்றைக்கு அம்மாவின் அரசில் மத்திய அரசோடு வாதாடி, போராடி 11 மருத்துவக்கல்லூரிகளை பெற்றோம். பல மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் நடந்தது அம்மாவின் ஆட்சியில்.

நாங்கள் கட்டிய கட்டிடத்தை இன்றைக்கு கத்திரிக்கோல் வைத்து ஜோராக சென்று திறக்கிறார்கள். ஏதோ இவர்கள் ஆட்சியில் கட்டியது போன்று இதற்கு ஒரு பில்டப் தருகிறார்கள். கட்டப்பட்ட கட்டிடங்கள், பாலங்கள், எல்லா திட்டங்களும் அம்மாவின் அரசிலே கொண்டு வரப்பட்டது தான். அந்த திட்டங்களைத் தான் ஏதோ இவர்கள் கொண்டு வந்தது போல ஒரு செயற்கையான தோற்றத்தை கொடுக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.