தற்போதைய செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே சென்றால் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை

அம்பத்தூர்

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே சென்றால் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட மண்டலம் 7ல் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மற்றும் ஆய்வுக் கூட்டம் மண்டல கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழ் வளர்ச்சி மற்றும் தொழில்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகளிடமும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பது குறித்த ஆய்வுகளையும்.

இந்த மண்டலத்தில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எத்தனை பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அங்கு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ள வெளி மாநிலத்தவர்கள் சுமார் 350 பேருக்கு முககவசம் கிருமிநாசினி ஆகியவற்றை அமைசச்ர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அதன் வீரியத்தை குறைக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 12 குழுக்கள் ஏற்படுத்தி சென்னையில் மட்டும் ஐந்து அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வரும் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள மண்டலம் 7, 11 ,12 ஆகிய மண்டலங்களில் நேற்று இரண்டு மண்டலங்களிலும் இன்று 7-வது மண்டலத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இந்த கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டவர்களை கண்டறிந்து அவர்கள் வீட்டில் தான் உள்ளார்களா என்று சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் அவ்வாறு அவர்கள் வீட்டில் இல்லாத பட்சத்தில் அவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தபடும் மையங்களில் அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது தான் கொரோனா வைரஸ் தாக்கத்தில் நாம் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று அறிவுறுத்தினோம்.

மேலும் இந்த மண்டலத்தில் உள்ள சுகாதார ஊழியர்கள் தங்களுக்கு தேவையானவற்றை எங்களிடம் கூறினால் முதலமைச்சர், துணை முதலமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரிடம் எடுத்துக்கூறி அவர்களின் தேவைகளை அம்மாவின் அரசு உடனடியாக பூர்த்தி செய்யும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

இக்கூட்டத்தின் போது மண்டல அதிகாரி தமிழ்ச்செல்வன், அம்பத்தூர் பகுதி செயலாளர் என்.அய்யனார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.